ஹார்ட்வேர் நிறுவனத்தில் ஊழியர் ரூ.2 கோடி மோசடி
ஹார்ட்வேர் நிறுவனத்தில் ஊழியர் ரூ.2 கோடி மோசடிஈரோடு:ஈரோடு, வ.உ.சி. பார்க் சாலையை சேர்ந்தவர் முகிம்கான், 43. நேற்று இவர், ஈரோடு எஸ்.பி.,ஜவகரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:ஏ.எம். தவுஹூத் கிளாஸ் ஹார்டுவேர் உரிமையாளராக உள்ளேன். என் தம்பி முபின்கானுடன் இணைந்து கண்ணாடி மற்றும் அது சார்ந்த பொருட்களை விற்று வருகிறோம். எங்கள் நிறுவனத்தில் உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ஆதில்கான், 12 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். நிறுவனத்தின் வரவு செலவு கணக்குகள், வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகையை ஆதில்கான் பார்த்து வந்தார்.சில மாதங்களுகவே கணக்குகள் முறையின்றி இருந்தது. வங்கிகளுக்கு கடன் தொகை முறையாக செலுத்தப்படவில்லை. இதுகுறித்து வங்கியில் இருந்து கேள்வி எழுந்தது. சலான்கள் போலியாக தயாரித்து கொடுத்ததும் தெரியவந்தது. கணக்குகளை சரி பார்த்த போது, இரண்டு கோடி ரூபாய் வரை ஆதில் கான் மோசடி செய்தது தெரியவந்துள்ளது. தன் உறவினர்கள் பெயரில் பண பரிமாற்றம் செய்துள்ளார். இதுபற்றி ஆதில்கானிடம் கேட்டபோது, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். வேலைக்கும் வருவது இல்லை. உரிய நடவடிக்கை எடுத்து, மோசடி செய்த தொகையை திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.