ரூ.5 கோடியில் கட்டப்பட்ட தானிய கிடங்கு 3 ஆண்டாக பயனற்று மூடி கிடக்கும் அவலம்
ஈரோடு, டிச. 18-ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் தலைமையில், வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது:அந்தியூர் யூனியன், பர்கூர் மலை, ஊசிமலையில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம், அந்தியூர் துணை ஒழுங்குமுறை விற்பனை கூடம், 500 டன் சேமிப்பு கிடங்கு கட்டப்பட்டது. 360 சதுர மீட்டரில் மூன்று ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு, இன்று வரை பயனற்று மூடி கிடக்கிறது. இதை தொடர்ந்து அதே துறை மூலம், 250 டன் ஊரக கிடங்கு, 150 சதுர மீட்டரில் கட்டி அதுவும் பயனற்று மூடி கிடக்கிறது.மீண்டும் மூன்றாவது முறையாக கடந்த, 2024 மார்ச் மாதம் திறக்கப்பட்ட குளிர் பதன கிடங்கு, மூடி கிடக்கிறது. மூன்று சேமிப்பு கிடங்குகளும் கடந்த மூன்று ஆண்டுகளில் அடுத்தடுத்து கட்டி, 5 கோடி ரூபாய் வீணாகி வருகிறது.சேமிப்பு கிடங்கு அந்தியூர்-மைசூரு சாலையில், 500 அடி உயரத்தில், குன்றின் மீது அமைந்துள்ளது. அங்கு செல்ல மண் சாலை, தார் சாலை என ஏதுமில்லை. மாட்டு வண்டி, பைக் முதல் கனரக வாகனங்கள் என எதுவும் சென்று வர முடியாது.இவற்றை கட்டும்போதே, மலைப்பகுதியில் இவ்வளவு பெரிய தானிய குடோனில் சேமிக்கும் அளவு இங்கு விவசாயம் உள்ளதா, விவசாயி களிடம் சேமிக்கும் அளவு தானியம் உள்ளதா எனக்கூட கணக்கிடாமல் இருந்துள்ளனர்.இவ்விடத்துக்கு வாகனங்கள், மாட்டு வண்டி, டூவீலர்கள் போன்றவை சென்று வரும் வகையிலான வழித்தடம், சாலை வசதியை ஏற்படுத்தி தந்தால் மட்டுமே, கிடங்குகள் பயன்பாட்டுக்கு வரும். அல்லது அரசு பணம், 5 கோடி வீணாகும்.இவ்வாறு தெரிவித்துள்ளனர்.