காங்கேயம், வெள்ளகோவிலுக்கு புது குடிநீர் திட்டங்களுக்கு மதிப்பீடு
திருப்பூர், ஆஅமைச்சர் சாமிநாதன் தலைமையில், அனைத்து துறைகளில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. கலெக்டர் கிறிஸ்துராஜ், முன்னிலை வகித்தார்.அதில், கூறப்பட்டதாவது: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் தாராபுரம், காங்கயம், மூலனுார், பல்லடம், பொங்கலுார் மற்றும் வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த, 1,252 ஊரக குடியிருப்புகளுக்கு, காவிரி ஆற்று நீரை ஆதாரமாக கொண்ட கூட்டு குடிநீர் திட்டம், ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் செயல்படுத்த திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது (2024) மக்கள் தொகை, 5 லட்சம் என்ற அடிப்படையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஊரக குடியிருப்புகளுக்கு தினசரி, நபர் ஒருவருக்கு, 55 லிட்., நீர் வழங்க முடியும் என, கணக்கிடப்பட்டுள்ளது. ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள, 1,790 குடியிருப்புக்கான கூட்டு குடிநீர் திட்டத்தை மறு தொகுப்பு செய்து, தாராபுரம், வெள்ளகோவில் நகராட்சிகள், முத்துார், மூலனுார், கன்னிவாடி, கொளத்துப்பாளையம் பேரூராட்சிகள்.மூலனுார், வெள்ளகோவில், தாராபுரம் (பகுதி) ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள குடியிருப்புகளுக்கும், உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய கூட்டு குடிநீர் திட்டத்தில் தாராபுரம் (பகுதி), குண்டடம், பல்லடம் மற்றும் பொங்கலுார் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஊரக குடியிருப்புகளுக்கும் நீர் வினியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.