உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மழை நீர் ஓடை குறுக்கே கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பளிச் பதில்

மழை நீர் ஓடை குறுக்கே கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பளிச் பதில்

பு.புளியம்பட்டி, ஆக. 25-புன்செய் புளியம்பட்டி நகராட்சி அம்மன் நகர் பகுதி வழியாக செல்லும் மழை நீர் ஓடையின் குறுக்கே, நகராட்சி சார்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் கட்டப்பட்டு வருவதால், கழிவு நீர் செல்ல வழியின்றி, மழை நீர் ஓடையில் கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால் தொற்று நோய் அபாயம் எழுந்துள்ளது. மழை நீர் குடியிருப்புகளுக்குள் புகுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், பணிகளை மேற்கொள்ள தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் கழிவுநீர் சுத்திகரிப்பு மைய கட்டுமான பணி தொடர்பாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தில், கார்த்திக் என்பவர் பதில் கேட்டிருந்தார். இதில் நகராட்சி பொது தகவல் அலுவலர் அளித்த பதிலில், 'அம்மன் நகர் பகுதி வழியாக செல்லும் மழை நீர் ஓடையின் குறுக்கே நகராட்சி சார்பில் கட்டப்பட்டு வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், நகராட்சி எல்லைக்குள் இருப்பதால் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மழை நீர் ஓடையின் குறுக்கேதான் கழிவுநீர் சுத்திகரிப்பு மைய கட்டுமான பணி நடப்பது அம்பலமாகி, மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: மழை நீர் ஓடையை ஆக்கிரமித்து கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து விடும் என ஆரம்பத்திலேயே எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால் நகராட்சி நிர்வாகம் அதை உதாசீனப்படுத்தி பணிகளை மேற்கொண்டுள்ளது. கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது குறித்து இங்குள்ள மக்களிடம் அதிகாரிகள் எதையுமே தெரிவிக்கவில்லை. மேலும் மழை நீர் செல்லும் நீர்வழி பாதையில் கட்டுமான பணி மேற்கொள்ளக்கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை மீறி அதிகாரிகள் செயல்படுகின்றனர். ஏற்கனவே இருந்தது போல் மழை நீர் தங்கு தடையின்றி செல்லும் வகையில் மழை நீர் ஓடையை மாற்ற வேண்டும். இல்லையேல் மக்கள் ஒன்று சேர்ந்து போராட்டங்களில் ஈடுபடுவோம். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை