மாநகரில் 2 அன்புச்சோலை மையம் துவக்கம்
ஈரோடு, ஈரோடு மாநகராட்சி, 56வது வார்டு சேரன் நகர், 49வது வார்டு ஜீவா நகர் என இரண்டு இடங்களில், முதியோர்களுக்கான அன்புச்சோலை திட்டத்தில், அன்புச்சோலை மையத்தை, முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார். ஈரோட்டில் நடந்த நிகழ்வில் வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டார். பிறகு இல்லத்தில் உள்ள முதியவர்களுக்கு பரிசுப்பொருள் வழங்கினார். இதுகுறித்து அமைச்சர் கூறியதாவது: தமிழகத்தில் முதற்கட்டமாக, 25 இடங்களில் மையம் துவங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சியில் இரு இடங்களில் துவங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மையத்திலும் குறைந்தது, 50 பேர் பயன்பெறும் வகையிலான ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே மகளிர் இலவச பஸ் பயண திட்டம், உரிமைத்தொகை திட்டம், புதுமைப்பெண் திட்டம் மகளிர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் இந்த மையமும் வரவேற்பை பெறும்.இவ்வாறு அமைச்சர் கூறினார்.