கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு தயார்நிலையில் 35 டன் விதை நெல்
கோபி, கீழ்பவானி வாய்க்கால் பாசனங்களின் சாகுபடிக்காக, கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், 35 டன் விதை நெல் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், கோபி அருகே கொடிவேரி தடுப்பணை வழியாக தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனங்களுக்கு கடந்த மே., 26 முதல், செப்.,22ம் தேதி வரை மொத்தம், 120 நாட்களுக்கு, முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அந்நீரை கொண்டு விவசாயிகள், நாற்றாங்காலில் விதை நெல்லை விதைத்து, நடவுப்பணியை எதிர்நோக்கியுள்ளனர்.இந்நிலையில் இரு பாசனங்களிலும், நெல் சாகுபடிக்காக வேண்டி, கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ஏ.எஸ்.டி., 16 ரக விதை நெல், டி.பி.எஸ்.,-5, என இரு ரகங்கள், தலா 43 ரூபாயில், மொத்தம் 50 டன் விற்பனைக்கு வைத்திருந்தனர். அந்த விதை நெல் அனைத்தும் தற்போது விற்றுத்தீர்ந்துள்ளது. அதேசமயம் வரும் ஆக., 15ல் கீழ்பவானி வாய்க்காலில் நீர் திறப்பு இருக்கும் என்பதால், கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், இப்போதே பி.பி.டி., 5204 ரகம் என்ற விதை நெல் கிலோ, 45 ரூபாய் விலையில், 35 டன் இருப்பு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. விதை நெல் தேவைப்படும் கீழ்பவானி பாசன விவசாயிகள், உடனே சங்கத்தில் அணுகி பெற்றுக்கொள்ளலாம் என அதன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.