ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு 3ம் கட்ட பயிற்சி
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக, ஓட்டுச்சாவடிகளில் பணிபுரியும் அலுவலர்களுக்கு, நேற்று, 3ம் கட்ட பயிற்சி நேற்று நடந்தது. தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாநகராட்சி அலுவலர் ஸ்ரீகாந்த் தலைமை வகித்து, பயிற்சி வழங்கினார்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வரும், 5ல், 237 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. 237 ஓட்டுச்சாவடிகளுக்கு கூடுதலாக, 20 சதவீதம் அலுவலர்கள் சேர்த்து தலா, 284 முதல், 2ம், 3ம் நிலை அலுவலர்கள், 1,200 வாக்காளர்களை கொண்ட ஓட்டுச்சாவடிகளுக்கு கூடுதலாக, 58, 4ம் நிலை அலுவலர்கள் என, 1,194 அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர்.ஓட்டுச்சாவடி பணியாளர்களுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்துவது, வி.வி.பேட் போன்றவற்றில் ஏற்படும் கோளாறு, சரி செய்தல், மாற்று ஏற்பாடுகள், தொடர்பு கொள்ள வேண்டிய அதிகாரிகள் விபரம் பற்றி தெரிவித்தனர். வாக்காளர்கள், வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்களுக்கான பணிகள், உரிமைகள் குறித்து விளக்கினர்.அனைவரும் தேர்தல் ஆணைய வழிகாட்டு நெறிமுறைகளை முற்றிலும் சரியாக பயன்படுத்த வேண்டும், என்பது பற்றி விளக்கம் அளித்து, செயல்முறை விளக்கமும் காண்பிக்கப்பட்டது. இப்பணியில் ஈடுபடும் அனைவரும் வரும், 4 காலை மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை ஓட்டுச்சாவடிகளுக்கு எடுத்து செல்லும் வகையில் எவ்வாறு வந்து சேர வேண்டும் என்பது பற்றிய வழிமுறைகளும் தெரிவிக்கப்பட்டது.