கூட்டுறவு வங்கிகளில் 9 லட்சம் மகளிர் ஆர்.டி., துவக்கம்: அமைச்சர் தகவல்
ஈரோடு: ''மகளிர் உரிமை தொகை பெறும் பெண்கள், கூட்டுறவு கடன் சங்கத்தில் கணக்கு வைத்து, 'ஆர்.டி.,' போடுகின்றனர். இந்த வகையில், 9 லட்சம் பேர் 'ஆர்.டி.,' துவங்கி உள்ளனர்,'' என்று, கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.ஈரோடு, திண்டல் மலை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில், நேற்று ஆய்வு செய்த அமைச்சர், நிருபர்களிடம் கூறியதாவது:ஈரோடு மாவட்ட பெருந்துறை வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் மூலம், கொப்பரை தேங்காய் விற்பனை சிறப்பாக நடக்கிறது. அங்கு விவசாயிகளிடம் கருத்து கேட்டதில், கூடுதலாக கிடங்கு தேவை என கேட்டுள்ளனர். இடம் தேர்வு செய்து, கூடுதல் கிடங்கு கட்டப்படும். கடந்த, 2011 முதல், 2021 வரை அ.தி.மு.க., ஆட்சியில், ஆண்டுக்கு சராசரியாக, 6,000 கோடி ரூபாய் அளவில் கடன் வழங்கினர். தற்போது, 12,000 கோடி ரூபாயை கடந்து கடன் வழங்கப்படுகிறது. மாநில அளவில் கூட்டுறவில் கடந்தாண்டு கடன் பரிவர்த்தனை, 86,000 கோடி ரூபாய்க்கு இருந்ததை, 1 லட்சம் கோடி ரூபாய்க்கு உயர்த்தி இலக்கு நிர்ணயித்துள்ளோம். கூட்டுறவு கடன் சங்க செயல்பாடுகள் ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில்தான் உள்ளது. தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களை நேரடியாக அதன் கீழ் கொண்டு வர முயல்கிறோம். கூட்டுறவு வங்கிகளை 'கோர் பாங்கிங்' மூலம் இணைத்து, ஏ.டி.எம்., கார்டு வழங்கி, எங்கும் பணம் எடுக்கலாம் என்பதற்கான திட்டப்பணி, 50 சதவீதத்துக்கு மேல் செய்யப்பட்டுள்ளது. மகளிர் உரிமை தொகை பெறும் பெண்கள், கூட்டுறவு கடன் சங்கத்தில் கணக்கு வைத்து, 'ஆர்.டி.,' போடுகின்றனர். இதை நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை. அவ்வாறாக கூட்டுறவு வங்கியில், 9 லட்சம் பேர் 'ஆர்.டி.,' துவங்கி உள்ளனர். இவ்வாறு அமைச்சர் கூறினார்.