பல வியாபாரிகளிடம் ஜவுளி வாங்கி ரூ.10 கோடி லபக்கிய பலே ஆசாமி
ஈரோடு:ஈரோடில் ஜவுளி கடை நடத்திய வடமாநில வியாபாரி, ஈரோடு வியாபாரி உட்பட பலரிடம், 10 கோடி ரூபாய்க்கு ஜவுளி வாங்கி மோசடி செய்துள்ளார். ஈரோடு, வீரப்பன்சத்திரத்தை சேர்ந்தவர் அருண் ராமநாதன், 38. இவர், ஈரோடு எஸ்.பி., சுஜாதாவிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: ஜவுளி ரகங்களான காடா துணி உற்பத்தி செய்யும் தறி வைத்து, ஆர்டரின் பெயரிலும், சொந்தமாகவும் தயாரித்து விற்கிறேன். ஈரோடு, கிருஷ்ணம்பாளையத்தில், ஸ்ரீமகாதேவ் டிரேடிங் கம்பெனி பெயரில் சென்னா ராம் என்பவர், ஓராண்டாக ஜவுளி கடை நடத்தி வந்தார். 'ஜவுளி ரகங்கள் வேண்டும்' என, என்னை அணுகினார். ஜூன் 27 முதல், ஜூலை 31 வரை, 2 கோடி ரூபாய் மதிப்புக்கு ஜவுளி வாங்கினார். இந்நிலையில், அவரது மொபைல் போன் 'சுவிட்ச் ஆப்' ஆகியுள்ளது. கடையும் பூட்டப்பட்டுள்ளது. ராஜஸ்தானுக்கு சென்று விட்டார். அவரிடம் இருந்து, 2 கோடி ரூபாயை பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார். புகார் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் கரூர், திருப்பூர், நாமக்கல், சேலம் ஜவுளி தயாரிப்பாளர்கள் எட்டு பேரும், ஈரோடு எஸ்.பி.,யிடம் மனு அளித்துள்ளனர். இவர்கள், 8 கோடி ரூபாய்க்கு ஜவுளி கொடுத்துள்ளதாக தெரிவித்து உள்ளனர்.