ஈரோட்டில் 1,072 தனியார் பள்ளி வாகனங்களில் ஆண்டு கூட்டாய்வு
ஈரோடு:ஈரோடு ஏ.ஈ.டி, பள்ளி வளாகத்தில், தனியார் பள்ளி வாகனங்களுக்கான ஆண்டு கூட்டாய்வு பணியை துவக்கி வைத்து கலெக்டர் ஆய்வு செய்தார்.ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிழக்கு, மேற்கு, பெருந்துறை பகுதி களில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களுக்கான, ஆண்டு கூட்டாய்வு பணியை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா துவக்கி வைத்து ஆய்வு செய்தார். தனியார் பள்ளிகளில் செயல்படக் கூடிய வாகனங்களில், அரசின் விதிமுறைப்படி வாகன பிளாட்பார்ம், இருக்கைகள், வேக கட்டுப்பாட்டு கருவி, அவசர கால வழி கதவு, தீயணைப்பு கருவி, படிக்கட்டுகள், முதலுதவி பெட்டி, வாகனத்தில் முன், பின் பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில் வாகனங்களில் புத்தகை பை வைக்கும் தனி இடம், பள்ளி எம்பளம், போலீஸ், ஆர்.டி.ஓ., பள்ளி நிர்வாகத்தின் தொலை பேசி எண், படிக்கட்டு உயரம், ஜன்னல் கம்பிகள், டிரைவர் கேபின், கதவுடன் இடது பக்க வழி உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 103 பள்ளிகளை சேர்ந்த, 1,072 வாகனங்களில் நேற்று ஆண்டு கூட்டாய்வு நடந்தது.இதில் குறைகள் கண்டுபிடிக்கப்பட்ட வாகனங்கள், ஒரு வாரத்துக்குள் மீண்டும் அவற்றை நிவர்த்தி செய்து ஆய்வுக்கு கொண்டு வர அறிவுறுத்தப்பட்டது.ஈரோடு ஆர்.டி.ஓ., ரவி, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பதுவை நாதன், மாதவன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் போது, பேரிடர் கால மீட்பு, தீயை கட்டுப்படுத்துவது குறித்து தீயணைப்பு துறை சார்பில் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.