ஈரோடு: குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்கவும், அடிப்படை வசதி செய்து தரக்கோரி, பல கிராம மக்கள் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் முறையிட்டனர்.* சித்தோடு அருகே செங்கம்பாளையம், ஆவுடையான்காடு, கருப்பண்ணசாமி நகர் பகுதியில், 150 பேர் வரை வசிக்கின்றனர். இவ்விடத்துக்கு ஒரே ஒரு தண்ணீர் பைப்லைன் மட்டுமே உள்ளதால், ஒரு குடும்பத்துக்கு மூன்று, நான்கு குடம் தண்ணீர் கூட கிடைப்பதில்லை. வெகுதுாரம் சென்று, குடிக்கவும், பிற பயன்பாட்டுக்கும் தண்ணீர் பிடிக்கும் நிலை உள்ளது. இதை போக்க கூடுதல் தண்ணீர் பைப்லைன் இணைப்பு தர வேண்டும். தவிர சாலை, தெரு விளக்கு, சாக்கடை வடிகால் வசதி செய்து தர வேண்டும்.* சென்னிமலை பெருந்துறை ஆர்.எஸ்.சாலை, அம்மா மெட்ரோ நகர் பகுதியினர் மனு வழங்கி கூறியதாவது: அம்மா மெட்ரோ நகரில் கைத்தறி நெசவாளர்களுக்காக தமிழக அரசு, 66 பசுமை வீடு கட்டித்தந்தது. இப்பகுதிக்கு குடிநீர் வசதி இல்லை. இங்குள்ள ஒரு போர்வெல்லை நம்பி இருந்தோம். தற்போது அந்த போர்வெல்லிலும் தண்ணீர் இன்றி வற்றி காணப்படுகிறது. பிரதான சாலையில் காவிரி குடிநீர் செல்வதால், அங்கிருந்து பைப்லைன் மூலம் எங்கள் பகுதிக்கு தண்ணீர் இணைப்பு தந்து, முழுமையாக தண்ணீர் தர வேண்டும்.* பெருந்துறை அருகே கம்புளியம்பட்டி, காசிலிங்க கவுண்டன் புதுார் மக்கள், மனுவில் கூறியதாவது: காசிலிங்க கவுண்டன்புதுாரில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டம், காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் எங்கள் பகுதிக்கு தண்ணீர் தருகின்றனர். ஐந்து மாதமாக சரிவர தண்ணீர் வினியோகிப்பதில்லை. பஞ்.,ல் முறையிட்டும் பயனில்லை. கூட்டு குடிநீர் திட்ட தண்ணீரை கூடுதலாக வழங்கி, 10,000 லிட்டர் தண்ணீர் தொட்டிக்கு பதில் கூடுதல் லிட்டர் தண்ணீர் தொட்டி அமைத்து, தேக்கி வினியோகிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.