இலவச வீட்டு மனை பட்டா தராததால் அரசு நிலத்தில் குடிசை அமைக்க முயற்சி
பவானிசாகர், டிச. 24-பவானிசாகர் அருகே தொப்பம்பாளையம், அண்ணா நகர், குரும்பபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். பெரும்பாலும் விவசாய கூலி தொழிலாளர்களாக உள்ளனர். இலவச வீட்டு மனை பட்டா கேட்டு, சத்தி தாசில்தார் அலுவலகத்தில் மனு அளித்திருந்தனர். பல ஆண்டுகளாகியும் வழங்காததால், ஆத்திரமடைந்த அப்பகுதி ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட நுாற்றுக்கும் மேற்பட்டோர், தொப்பம்பாளையம், கணபதி நகர் அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் குடிசை அமைக்க, பொருட்களுடன் நேற்று காலை திரண்டனர். தகவலறிந்து பவானிசாகர் போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். சமாதானம் அடையாமல் தங்களுக்கு பிடித்த இடத்தை பிடித்து, குச்சிகளை நடும் பணியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து சத்தி டி.எஸ்.பி., சரவணன், சத்தி தாசில்தார் சக்திவேல் வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது மக்கள் கூறியதாவது: வருமானத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பதால் அரசு வழங்கும் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு விண்ணப்பம் செய்திருந்தோம். சத்தி தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று எப்போது கேட்டாலும் இடம் பார்த்துக் கொண்டே இருக்கிறோம் எனக்கூறி அனுப்பி விடுகின்றனர். உடனடியாக எங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு கூறினர்.''விண்ணப்பள்ளி பஞ்., குரும்பபாளையத்தில், அரசுக்கு சொந்தமான நத்தம் நிலத்தை அளவீடு செய்து, தகுதியானவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று தாசில்தார் உறுதி கூறவே, மக்கள் கலைந்து சென்றனர்.