பவானிசாகர் அணை நீர்மட்டம் 2வது நாளாக 102 அடியில் நீடிப்பு
புன்செய்புளியம்பட்டி, அக். 23ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை, 105 அடி உயரம், 32.8 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. அணை நீர் பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதியில், மழை தீவிரமடைந்ததால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் மளமளவென உயர்ந்து நேற்று முன்தினம், 102 அடியை எட்டியது. தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து உபரிநீர் பவானி ஆற்றில் திறக்கப்பட்டது. தற்போது அணையிலிருந்து உபரி நீர், 8,900 கன அடி; பாசனத்துக்காக கீழ்பவானி வாய்க்காலில், 600 கன அடி தண்ணீர் என மொத்தம், 9,500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அதாவது அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம், 102 அடி; நீர் இருப்பு, 30.3 டி.எம்.சி.,யாக உள்ளது. அணைக்கு வரும் தண்ணீரும் வெளியேற்றப்படும் நீரும் ஒரே அளவில் இருப்பதால், பவானிசாகர் அணை நீர்மட்டம் தொடர்ந்து இரண்டாவது நாளாக 102 அடியில் நீடிக்கிறது.