புகாரால் புன்செய்புளியம்பட்டியில் வணிக வளாகம் கட்டும் இடத்தில் ஆய்வு
புகாரால் புன்செய்புளியம்பட்டியில்வணிக வளாகம் கட்டும் இடத்தில் ஆய்வுபுன்செய் புளியம்பட்டி, அக். 23-புன்செய் புளியம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட சத்தி சாலை, நம்பியூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில், வணிக வளாக கட்டடங்கள் கட்டப்பட்டு, 40 ஆண்டுகளுக்கு மேலானதால் அவற்றை இடித்து விட்டு, புதிய வணிக வளாக கடை கட்டும் பணி தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில் நகராட்சி அலுவலகம், சத்தி சாலையை ஒட்டி வணிக வளாகம் அமைக்கப்படும் இடம், கால்நடை பராமரிப்பு துறைக்கு சொந்தமான மந்தைவெளி என வருவாய் துறை ஆவணத்தில் உள்ளதாகவும், நகராட்சி அலுவலகத்தை ஒட்டி சிறுவர் பூங்கா இருந்ததாகவும், நகராட்சி கடைகள் கட்டப்படும் இடத்தை ஆய்வு செய்து, சிறுவர் பூங்கா மற்றும் மந்தைவெளியை மீட்க நடவடிக்கை எடுக்குமாறும், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனருக்கு, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஈரோடு கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் மற்றும் கோபி துணை இயக்குனர் அறிவுறுத்தலின்படி புன்செய்புளியம்பட்டி கால்நடை மருத்துவமனை மருத்துவர் திருநாவுக்கரசு, நகராட்சி சார்பில் கடைகள் கட்டப்படும் இடத்தை நேற்று காலை ஆய்வு செய்தார். இது தொடர்பான ஆய்வறிக்கை, உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் அடிப்படையில் நடவடிக்கை அமையும் என்று, அவர் தெரிவித்தார்.