கோபி மாவட்ட சிறையில் மத்திய சிறை அதிகாரி விசாரணை
கோபி, கைதி ஒருவர் தெரிவித்த புகாரின் அடிப்படையில், கோவை மத்திய சிறையின் ஜெயிலர் சரவணன், கோபியில் உள்ள மாவட்ட சிறையில் விசாரணை செய்துள்ளார்.ஈரோடு மாவட்டம், கோபி அருகே கச்சேரிமேட்டில், அரசு மருத்துவமனை சாலையில், ஈரோடு மாவட்ட சிறை இயங்குகிறது. இங்குள்ள, 10 அறைகளில் தலா, 20 பேர் என, 200 பேரை அடைக்கலாம். நீதிமன்ற காவலில் உள்ள, சிறைவாசிகள் மட்டுமே அடைக்கப்படுகின்றனர். தற்போது இங்கு, 120 பேர் உள்ளனர். மாவட்ட சிறையில் உள்ள கைதிகளை, சந்திக்க வரும் பெண்களிடம், அங்குள்ள சிறை பணியாளர் ஒருவர், மொபைல்போனில் தொந்தரவு கொடுப்பதாக, கோவை மத்திய சிறைக்கு புகார் சென்றது.இதையடுத்து, கோவை மத்திய சிறை ஜெயிலர் சரவணன், கடந்த நான்கு நாட்களுக்கு முன், கோபி மாவட்ட சிறையில், புகார் அளித்த கைதியிடமும், புகாருக்குள்ளான சிறை பணியாளர் ஒருவரிடமும் விசாரணை நடத்தி சென்றுள்ளார்.இதுகுறித்து சிறைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சிறைவாசி அளித்த புகாரின்படி, கோவை மத்திய சிறை ஜெயிலர் சரவணன் விசாரணை செய்தார். வீடியோ ஆதாரம் ஏதும் வெளியாகவில்லை. புகார் தெரிவித்த கைதியிடமும், புகாருக்குள்ளான சிறை பணியாளர் ஒருவரிடம் விசாரணை செய்துள்ளார். முழு விசாரணைக்கு பின்பே, அதன் உண்மை நிலைமை தெரியவரும்,' என்றார்.