2 நாள் நிகழ்ச்சிகளில் உற்சாகமாக பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின்
ஈரோடு, டிச. 21-ஈரோட்டில் இரண்டு நாட்கள் நடந்த விழாவில், முதல்வர் ஸ்டாலின் உற்சாகத்துடன் பங்கேற்றார். ஈரோட்டுக்கு நேற்று முன்தினம் வந்த முதல்வர் ஸ்டாலின், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். நேற்று காலை, 1,369 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கான அரசு விழாவில் கலந்து கொண்டார். முன்னதாக விழாவில் பங்கேற்க, காளிங்கராயன் விடுதியில் இருந்து வேனில் புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின், பன்னீர்செல்வம் பூங்காவில் கட்சியினர் வழங்கிய வரவேற்பில் பங்கேற்றார். சாலையில் நடந்து சென்று, மக்களுடன் கை குலுக்கி சென்றார்.சோலார் புது பஸ் ஸ்டாண்டில் நடந்த அரசு விழாவில், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வரவேற்றார். வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு முன்னிலை வகித்தனர். புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிந்த பணிகளை துவக்கி வைத்தும், நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்வர் ஸ்டாலின் பேசினார்.விழாவில் அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், மகேஷ், மதிவேந்தன், எம்.பி.,க்கள் பிரகாஷ், அந்தியூர் செல்வராஜ், சுப்பராயன், எம்.எல்.ஏ.,க்கள் வெங்கடாசலம், சரஸ்வதி, மேயர் நாகரத்தினம், மாநகர செயலாளர் சுப்பிரமணியம், நெசவாளரணி மாநில செயலாளர் சிந்து ரவிச்சந்திரன், மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார், மாநகராட்சி முதலாவது மண்டல தலைவர் பழனிச்சாமி, மாவட்ட கழக துணை செயலாளர் செல்லப்பொன்னி மனோகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் குமாரசாமி, சூரம்பட்டி பகுதி செயலாளர் வில்லரசம்பட்டி முருகேசன், மாவட்ட கழக துணை செயலாளர் சின்னையன், முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.முதல்வர் விழா துளிகள்...* ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணத்தின், இரண்டு நாட்களிலும் போலீஸ் தரப்பில் முறையான போக்குவரத்து மாற்று ஏற்பாடு செய்யாததால், மீனாட்சிசுந்தரனார் சாலை, பெருந்துறை சாலை, நசியனுார் சாலை, மேட்டூர் சாலை உட்பட பல இடங்களில் மக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். குறிப்பாக பெருந்துறை சாலையை பலமுறை அடைத்ததால் மக்கள் திணறினர்.* ஈரோட்டை சேர்ந்த இளங்கோவன் - ஸ்ரீதேவி தம்பதியின் பெண் குழந்தைக்கு, 'திராவிடச்செல்வி' என பெயரிட்டார்.* ஈரோடு காளை மாட்டு சிலை அருகே சாலையில் நடந்து வந்த முதல்வருடன் பெண்கள் செல்பி எடுத்து கொண்டனர். அதில் ஒரு பெண், முதல்வரின் கன்னத்தை தடவி முத்தமிட்டார். * அரசு விழாவில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வரவேற்க, டி.ஆர்.ஓ., நன்றி கூற, முதல்வர் மட்டும் உரையாற்றினார். அமைச்சர்கள், எம்.பி.,க்களை பேச அழைக்கவில்லை. திருப்பூர் எம்.பி., சுப்பராயன், மொடக்குறிச்சி பா.ஜ., - எம்.எல்.ஏ., சரஸ்வதி தங்கள் தொகுதி பிரச்னை தொடர்பாக முதல்வரிடம் மனு வழங்கினர். இதில் சரஸ்வதியை முதல்வர் தனியாக அழைத்தும் பேசினார்.* விழாவில் பங்கேற்ற அனைத்து பயனாளிகள், பிற நிலையில் உள்ளவர்களுக்கு பிஸ்கெட், வாட்டர் பாட்டில், சிறு கூல்டிரிங்ஸ் கொண்ட பேப்பர் கவர் இருக்கையிலேயே வைக்கப்பட்டிருந்தது. இதில் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்களுக்கு ஸ்வீட், கேக், மிக்சர் கூடுதலாக சேர்க்கப்பட்டிருந்தது.