முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
ஈரோடு, டிச. 20-ஈரோடு மாவட்டத்தில், 2 நாள் நிகழ்ச்சிக்காக ஈரோட்டுக்கு நேற்று வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.சென்னையில் இருந்து விமானத்தில் கோவை வந்த முதல்வர், அங்கிருந்து காரில் ஈரோடு வந்தார். மாவட்ட எல்லையான விஜயமங்கலம் டோல்கேட் அருகே, மாவட்ட நிர்வாகம், மாவட்ட தி.மு.க., சார்பில் வரவேற்பு அளித்தனர். வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, எம்.பி., அந்தியூர் செல்வராஜ், அமைச்சர் சாமிநாதன், முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் ஆகியோர் பூங்கொத்து, நுால்கள் வழங்கி வரவேற்றனர்.வேனில் இருந்து இறங்கிய முதல்வர், மக்கள் நின்ற பகுதிக்கு சென்று கை குலுக்கியும், பேசியும், சால்வை, நுால்களை பெற்றும் சிறிது துாரம் நடந்து சென்றார். பின் வேனில் ஏறிய முதல்வர் பெருந்துறை, மேட்டுக்கடை, நஞ்சனாபுரம் உட்பட பல இடங்களில் வேனில் இருந்து இறங்கி, பொதுமக்கள் பக்கம் சென்று, நலம் விசாரித்தும், கைகளை பற்றியும் நடந்து வந்தார்.வரும் வழியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் நஞ்சனாபுரத்தில், 2 பயனாளிகளுக்கு வீடு தேடிச்சென்று மருந்து பெட்டகம் வழங்கினார். பின், காளிங்கராயன் விடுதியில் மதிய உணவுக்கு பின் ஓய்வெடுத்தார்.மாலையில் தி.மு.க., நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி, முன்னாள் எம்.எல்.ஏ., சந்திரகுமார் குடும்ப திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார். இன்று காலை, 9:00 மணிக்கு, ஈரோடு புதிய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் நடக்கும் அரசு விழாவில், 1,377 கோடி ரூபாய் மதிப்பில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிந்த பணிகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கஉள்ளார்.அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாசலம், மேயர் நாகரத்தினம், மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார், முன்னாள் எம்.பி., கந்தசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.