தகுதியானவர்களுக்கு கல்வி கடன் உறுதி செய்ய கலெக்டர் யோசனை
ஈரோடு:ஈரோடு மாவட்ட நிர்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து, கல்வி கடன் விழிப்புணர்வு கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. கலெக்டர் கந்தசாமி தலைமை வகித்து பேசியதாவது:மாணவ, மாணவியர் கல்வியை தொடர அவர்களுக்கு வழங்கப்படுவது கல்வி கடன் அல்ல. கல்விக்கான, எதிர் காலத்துக்கான முதலீடு. கல்வி கடன் பெறுவதில் சிரமம் இருந்தால், அவர்களுக்கு மாற்று வழி செய்து, தடையில்லாத வகையில் கல்விக்கடன் வழங்க வேண்டும். கல்வி கடன் பெற இணை தளம், வித்யாலட்சுமி தளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதனை கல்லுாரி பிரதிநிதிகள் மாணவ, மாணவியருக்கு தெரிவித்து, தகுதியான, தேவையான அனைவருக்கும் கல்வி கடன் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும், என கேட்டு கொண்டார்.மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் மலர்விழி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் விவேகானந்த் உட்பட பலர் பங்கேற்றனர்.