கல்லுாரி மாணவி விபரீத முடிவு
சென்னிமலை:சென்னிமலை அருகே, கல்லுாரி மாணவி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.ஈரோடு மாவட்டம், சென்னிமலை யூனியன், சிறுக்களஞ்சி ஊராட்சி, எல்லக்காட்டை சேர்ந்த செல்வக்குமார் என்பவரின் மகள் பிரணிகா, 19. இவர், பெருந்துறையில் உள்ள கல்லுாரியில் பி.டெக்., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.இவரது தாய் சுஜாதா, வீட்டின் முன்புறம் மளிகை கடை நடத்தி வருகிறார். தம்பி ஹரிபிரசாத், 15, பள்ளி மாணவர். வழக்கம் போல் நேற்று முன்தினம் கல்லுாரிக்கு சென்று விட்டு, பிரணிகா மாலையில் வீடு திரும்பியுள்ளார். தாய் சுஜாதா கடையிலும், தம்பி ஹரிபிரசாத் மாலையில் டியூஷனுக்கும் சென்றிருந்தனர்.இரவு ஹரிபிரசாத் டியூஷன் முடிந்து வீட்டிற்கு வந்தபோது, படுக்கை அறையில் பிரணிகா துப்பட்டாவால் துாக்கிட்ட நிலையில், தொங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு தாய் சுஜாதா மற்றும் அக்கம்பக்கத்தினர், பிரணிகாவை மீட்டு, ஊத்துக்குளியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு காரில் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், பிரணிகா ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.சென்னிமலை போலீசார், மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து, சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.