வழக்குப்பதிவு செய்யாமல் அலைக்கழிப்பு காஞ்சிகோவில் போலீசார் மீது புகார்
ஈரோடு, நவ. 29-சேலம் மாவட்டம் சங்ககிரி அருகேயுள்ள கிடையூரை சேர்ந்தவர் பரத், 18; திருச்செங்கோடு தனியார் கல்லுாரி மாணவன். தந்தை செல்வராஜூடன் நேற்று வந்து, ஈரோடு எஸ்.பி., ஜவகரிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:தனியார் கல்லுாரி மாணவனான நான், கடந்த, ௮ம் தேதி உறவினர் வீட்டு திருமண விழாவுக்கு காஞ்சிக்கோவிலுக்கு சென்றேன். கடந்த, 10ல் காஞ்சிக்கோவில் உறவினர் வீட்டிற்கு எனது உறவினர் கோபிநாத், 33, என்பவருடன் பைக்கில், பின்னால் அமர்ந்து சென்றேன். குறுச்சான் வலசு--மூலக்கடை சாலையில் கட்டுப்பாட்டை இழந்து பைக் தடுமாறியதில் இருவரும் விழுந்தோம். இதில் எனக்கு இடது காலில் இரண்டு எலும்பு உடைந்தது. கோபிநாத்துக்கு லேசான காயம் ஏற்பட்டது. ஈரோடு தனியார் மருத்துவமனையில் எனக்கு அறுவை சிகிச்சை செய்தனர். அப்போது வந்த காஞ்சிக்கோவில் போலீசார் என்னிடம் வாக்குமூலம் பெற்றனர். விபத்து குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி புகாரளித்திருந்தேன். இரு வெள்ளை தாளில் கையெழுத்து பெற்ற போலீசார், இதுவரை வழக்கு பதிவு செய்யாமல் அலைக்கழிக்கின்றனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்து இருந்தார்.