கோவில் குத்தகை நிலத்தில் விதிமீறி மரம் வெட்டியதாக புகார்
காங்கேயம், கோவில் குத்தகை நிலத்தில் விதிமீறி மரம் வெட்டப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.காங்கேயத்தை அடுத்த சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலுக்கு சொந்தமாக பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. அவற்றை இந்து சமய அறநிலைய துறை நிர்வாகம் செய்து வருகிறது. சில இடங்களில் கோவில் நிலம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இந்த நிலத்தில், கோவில் நிர்வாகம் அல்லது இந்து சமய அறநிலையத்துறை அனுமதியின்றி மரங்களை வெட்டுவது சட்ட விரோதமானது. விவசாயம் செய்ய மட்டுமே நிலத்தை பயன்படுத்த வேண்டும்.இந்நிலையில் சிவன்மலை கிரிவலப்பாதையில் 3 ஏக்கர் நிலம், மூன்றாண்டு குத்தகைக்கு, 9,500 ரூபாய்க்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இந்த இடத்தில் சுற்றிலும் கம்பி வேலி அமைத்துள்ளனர். அதற்காக சில மரங்களையும், வனப்பகுதி மரங்களும் சேர்ந்து வெட்டப்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரில் சிவன்மலை கோவில் அலுவலர்களும் பார்வையிட்டு சென்றுள்ளனர். அதன் பிறகும் நடவடிக்கை இல்லை. விதிமீறி கோவில் மரத்தை வெட்டிய விவகாரத்தில், கோவில் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க, தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.