6 தொ.கூ.க.சங்கங்கள் தரம் உயர்வு கூட்டுறவு துறை அமைச்சர் அறிவிப்பு
ஈரோடு, நவ. 22-கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், பெருந்துறை, ஈரோடு மஞ்சள், கொப்பரை தேங்காய் விற்பனை சொசைட்டிகளில் நேற்று ஆய்வு செய்தார். பின், திண்டல் மலை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் நடந்த விழாவில் பங்கேற்றார். கூட்டுறவு பதிவாளர் சுப்பையன் தலைமை வகித்தார். மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர். மண்டல இணை பதிவாளர் ராஜ்குமார் வரவேற்றார். பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், 3 பேருக்கு பணி நியமன ஆணையை வழங்கி, அமைச்சர் பெரியகருப்பன் பேசியதாவது: இங்கு 2,120 பயனாளிகளுக்கு, 25 கோடி ரூபாயில் கடன் தொகை, 3 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக நடந்த அனைத்திந்திய கூட்டுறவு வார விழாக்கள், இத்துறை சிறப்பை வெளிப்படுத்தி, மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளன.திண்டல்மலை தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் போல, 6 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் நன்கு வளர்ச்சி அடைந்து, அதிகமாக கடனுதவி வழங்குவதால், பயனாளிகள் கோரிக்கைப்படி, 6 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், நகர்ப்புற கூட்டுறவு கடன் சங்கங்களாக தரம் உயர்த்தப்படுகிறது.கூட்டுறவு துறையை கடன் வழங்குவதற்கான அமைப்பாக மட்டும் எண்ணாமல், உங்கள் சேமிப்புக்களை வைப்புத்தொகையாக வழங்க வேண்டும். பிற அமைப்புகளைவிட இங்கு கூடுதல் வட்டி வழங்கப்படுகிறது. இச்சங்கங்கள் வலுப்பெறும்போது, ஒவ்வொரு தனி நபரும் வளர்ச்சி பெற இயலும். கூட்டுறவில் கடன் பெறுவோர், உரிய காலத்தில் திரும்ப செலுத்தி, சங்கமும், நீங்களும் உயர வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.