பயிர் விளைச்சல் போட்டி விவசாயிகளுக்கு அழைப்பு
ஈரோடு:ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் அருள்வடிவு விடுத்துள்ள அறிக்கை: மாநில, மாவட்ட அளவில் அனைத்து பயிர்களிலும் உற்பத்தி திறனை பெருக்கும் நோக்கில், பயிர் விளைச்சல் போட்டி நடத்தப்படுகிறது. இதில் அதிக விளைச்சல் ஈட்டும் விவசாயிகளுக்கு ரொக்கப்பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.மாநில அளவில் சிறு, குறு விவசாயிகளுக்கான போட்டியில் துவரை, உளுந்து, பச்சை பயறு, நிலக்கடலை, எள், சாமை பயிர்களில் நடத்தப்படுகிறது. இதில் முதலிடம் பெறும் விவசாயிக்கு, 2.50 லட்சம் ரூபாய், இரண்டாமிடத்துக்கு, 1.50 லட்சம் ரூபாய், மூன்றாமிடத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும். மாவட்ட போட்டிகளில் நிலக்கடலை, நெல் பயிர்களில் முதல் இரு இடங்களுக்கு, 50,000, 25,000 ரூபாய் பரிசாக வழங்கப்படும்.மாநில அளவிலான நெல் உற்பத்தி திறன் விருது போட்டி, திருந்திய நெல் சாகுபடி தொழில் நுட்பத்தை கடைபிடித்து, அதிக மகசூல் ஈட்டும் விவசாயிகளுக்கு, சிறப்பு பரிசாக ஐந்து லட்சம் ரூபாய் வழங்கப்படும். இதேபோல் பாரம்பரிய நெல் விதைகள் பாதுகாப்பு விருது, பயிர் விளைச்சல் போட்டிகளில் முதலிடம் பெறும் விவசாயிக்கு, ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும் விவசாயிகள், உரிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, பதிவு கட்டணமாக, 150 ரூபாயை வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் செலுத்தி பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.