கொடிவேரியில் மேம்பாட்டு பணி தீவிரம்
கோபி:கொடிவேரி தடுப்பணையில், நுழைவுச்சீட்டு வழங்கும் பகுதி மேம்படுத்தும் பணி தீவிரமாக நடக்கிறது.கோபி அருகே கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகளுக்கு நுழைவு வாயிலில் பிரதான கேட் மூடப்பட்டு, பக்கவாட்டில் சிறிய வழியில் தடுப்பணைக்குள் நுழையவும், மற்றொரு வழியில் வெளியேறவும் வழிவகை செய்யப்பட்டிருந்தது. முக்கிய விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில், ஆயிரக்கணக்கானோர் வருகையின்போது, நுழைவுச்சீட்டு வழங்கும் பகுதியில், கூட்ட நெரிசலில் பாசன பணியாளர்களின் நிலைமை திண்டாட்டமாக இருந்தது. அந்த சிரமத்தை போக்கும் வகையில், நுழைவுச்சீட்டு வழங்கும் பகுதியில், அதற்கான வரிசையை கடைபிடிக்கும் வகையில், ஏற்கனவே இருந்த தடுப்பு வழியை, தற்போது இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. இதனால் இனி சுற்றுலா பயணிகள், இரு வரிசையாக நின்று நுழைவுச்சீட்டு பெறும் வகையில், புதியதாக தடுப்பு அமைத்து, பெயின்ட் அடிக்கும் பணி நடக்கிறது. அதேபோல் தடுப்பணையை விட்டு, நுழைவு வாயில் வழியாக வெளியேறும் பகுதியில், வரிசையை கடைபிடிக்க தடுப்புகளும், புதிய கதவும் அமைக்கப்பட்டுள்ளது. தவிர தடுப்பணை வளாகத்தில் உள்ள சிறுவர் பூங்காவின், பவானி ஆற்றங்கரை ஓரத்தில், புதியதாக தடுப்பு அமைக்கப்பட்டு வருகிறது. பணிகள் ஒரு வாரத்துக்குள் முடியும் என்று பணியாளர்கள் தெரிவித்தனர்.