பொங்கல் நாளில் கோவிலில் குவிந்த பக்தர்கள்
-நிருபர் குழு -தமிழர் திருநாளான பொங்கல் விழா, உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால், நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதேசமயம் கோவிலுக்கும் பக்தர்கள் படையெடுத்தனர். சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு, அதிகாலை முதலே பக்தர்கள் வரத் தொடங்கினர்.பொது தரிசனத்தில் ஒரு மணி நேரம் காத்திருந்து முருகப்பெருமானை வழிபட்டனர். முன்னதாக கோவிலில் அதிகாலை, 5:30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, கோமாதா பூஜை நடந்தது.பிறகு சிறப்பு வழிபாடு, அபிஷேகம், அலங்காரம் காலை, 6:30 மணிக்கு தொடங்கி இரவு, 8:00 மணி வரை நடந்தது. பொங்கல் விழாவையொட்டி சுப்ரமணிய சுவாமி ராஜ அலங்காரத்தில் காட்சியளித்தார். முருகன் சன்னதிக்கு பின்புறம் உள்ள தன்னாசியப்பன் கோவில், பிண்ணாக்கு சித்தர் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது. மலைப்பாதையில் பணி நடப்பதால் பக்தர்கள் படிக்கட்டு வழியாக நடந்து சென்று முருகப்பெருமானை வழிபட்டனர்.*புன்செய்புளியம்பட்டியில் அண்ணாமலையார், மாரியம்மன், காமாட்சியம்மன், சவுடேஸ்வரி அம்மன் கோவில்களில், பொங்கல் திருநாளை முன்னிட்டு, மக்கள் பொங்கல் வைத்து கொண்டாடினர். மாரியம்மன், சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் பாரம்பரிய முறைப்படி, மாட்டு வண்டியில் ஏர் கலப்பை பூட்டி, கன்று குட்டிகளுக்கு மாலை அணிவித்து சிறப்பு பூஜை நடந்தது.பானை வைத்து மஞ்சள் குலை போட்டு கரும்பு வைத்து பால் பொங்கும் போது பெண்கள் குலவை எழுப்பினர்.* சத்தியமங்கலம் அருகேயுள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலுக்கு, காலை முதல் மாலை வரை பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். குண்டத்தில் உப்பு துாவியும், நுாற்றுக்கணக்கானோர் மொட்டை அடித்தும் வழிபட்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், கோவில் வளாகம் களை கட்டியது. * ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில், கஸ்துாரி அரங்கநாதர் கோவில், பெரிய மாரியம்மன் கோவில் உட்பட பல்வேறு கோவில்களில், காலை முதலே பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. பெரும்பாலானோர் புத்தாடை அணிந்து, உற்சாகத்துடன் வந்தனர். பொங்கலை ஒட்டி பல கோவில்களில் அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.