மேலும் செய்திகள்
தரமான தீபாவளி பலகாரம் தயாரிக்க அறிவுரை
18-Oct-2024
திருப்பூர் : தீபாவளியை ஒட்டி விற்பனைக்கு தயாரிக்கப்படும் இனிப்பு, கார வகைகள், சுவை மட்டுமின்றி தரத்துடன் தயாரிக்க, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. ''உணவு பாதுகாப்பு சட்டத்திற்கு புறம்பாக உணவு தயாரித்தல், விற்பனை செய்தல் மற்றும் உணவு பாதுகாப்பு உரிமம், பதிவு சான்று பெற்றுக் கொள்ளாமல் உணவு வணிகம் செய்வோர் குறித்த தகவலை 0421-2971190, 94440 42322 என்ற எண்ணில் புகாராக தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இனிப்பு, காரம் தயாரிப்போருக்கு உணவு பாதுகாப்புத்துறையின் அறிவுரை: அனைத்து ஸ்வீட், காரம் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள், உணவு பாதுகாப்பு துறையில் பதிவு செய்து, உரிமம் பெற வேண்டும். தயாரிப்பு பகுதி அல்லது சமையலறை போதிய வெளிச்சத்துடன் இருக்க வேண்டும்; தரைத்தளம் உடைந்த நிலையில் பூச்சி, எலிகள் நடமாடும் வகையில் இருக்க கூடாது. உணவு தயாரிப்புக்கு, பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிமாக செயற்கை நிறமி சேர்க்க கூடாது. நீரும், நிறமியும் உணவின் தரத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன. உணவு தயாரிப்புக்கான பாத்திரங்கள் சுத்தமாக கழுவி வைத்திருக்க வேண்டும். உணவு சமைக்கும் பணியாளர்கள், தன் சுத்தம் பேண வேண்டும். 'பேக்கிங்' செய்யப்படும் உணவு பொட்டலங்கள் மீது விபரம் அச்சிடப்பட வேண்டும். சில்லரை விற்பனை செய்யப்படும் இனிப்பு, காரம் போன்ற உணவு பொருட்களின் தயாரிப்பு, காலாவதி தேதி காட்சிப்படுத்தப்பட வேண்டும். உணவு தயாரிப்புக்கு பொட்டலமிடப்பட்ட எண்ணெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும். சமையல் எண்ணெயை ஒருமுறை மட்டுமே சூடுபடுத்த வேண்டும். இவ்வாறு அறிவுறுத்தியுள்ளனர்.
18-Oct-2024