ஈரோட்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்; மூன்று பறக்கும் படைகள் அமைப்பு
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால், தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்த நிலையில், மூன்று பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன.இதுபற்றி, ஈரோடு கிழக்கு தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான மணீஷ், கூறியதாவது: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்துள்ளது. வரும், 10ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் துவங்கி, 17ல் முடிகிறது. 18ல் வேட்பு மனு பரிசீலனை நடக்கிறது. வேட்பு மனுவை, 20ம் தேதி திரும்ப பெறலாம். பிப்.,5ம் தேதி ஓட்டுப்பதிவும், 8ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது. 10ம் தேதி தேர்தல் நடத்தை பணி நிறைவு பெறுகிறது.மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் தலைமையில், தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்துள்ளது. உடனடியாக மூன்று பறக்கும் படையினர் அறிவிக்கப்பட்டு, 24 மணி நேர கண்காணிப்பை தொடங்கியுள்ளனர். தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பொது இடங்கள், அரசு அலுவலகங்களில் அரசியல் கட்சிகள் சார்ந்த பேனர், கொடிக்கம்பம், படங்கள், சிலைகள், பேனர், ஓவியங்கள், விளம்பரங்கள், பெயர் பலகைகள் அகற்றப்படும். சிலைகளை மறைக்கும் பணி நடந்து வருகிறது. அடுத்த, 24 மணி நேரத்துக்குள் அரசு கட்டடங்கள், பொதுத்துறைக்கான இடங்களில் அப்பணி முடிக்கப்படும். அடுத்த, 48 மணி நேரத்துக்குள் தனியார் இடங்கள், கட்டடங்கள், பொது இடத்திலும், இப்பணி முடிக்கப்படும். எம்.எல்.ஏ., - மேயர் போன்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.தொகுதியில் இரண்டு லட்சத்து, 26,433 வாக்காளர்கள் உள்ளனர். ஒரு லட்சத்து, 9,636 ஆண்கள்; ஒரு லட்சத்து, 16,760 பெண்கள்; மூன்றாம் பாலினத்தவர், 37 பேர் உள்ளனர். ராணுவம் போன்ற பணியில் உள்ள சேவை வாக்காளர், மாற்றுத்திறனாளிகள், 1,570 பேர் உள்ளனர். தொகுதியில், 53 இடங்களில், 237 ஓட்டுச்சாவடிகள் உள்ளன.மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டு, அதற்கு தனியான போன் எண், சி-விஜில் ஆப் மூலம் புகார் தெரிவித்தல், கண்காணித்தல் பணிகள் நாளை (இன்று) துவங்கும். வரும், 10ம் தேதி முதல் நிலை கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழு அமைக்கப்படும். தேவையான எண்ணிக்கையில் கூடுதல் பறக்கும் படை அமைக்கப்படும். தேர்தல் பார்வையாளர்கள் வந்ததும், அதற்கான குழுக்களும் அமைக்கப்படும். மீடியாக்களை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.தேர்தல் ஆணைய விதிப்படி, ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்படும், 50,000 ரூபாய்க்கு மேலான தொகை, பொருட்கள், பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்படும். உரிய ஆவணங்களை சமர்பித்து திரும்ப பெறலாம். ஓட்டுப்பதிவுக்கான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் நேற்று முன்தினம் முதல் சரிபார்க்கும் பணி தொடங்கி, தயார் செய்யும் பணி நடக்கிறது. இவ்வாறு கூறினார்.