ஈரோடு 108 ஆம்புலன்ஸில் வேலைவாய்ப்பு முகாம்
ஈரோடு, டிச. 19-ஈரோடு, அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள டி.பி., ஹாலில், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் வரும், 21 காலை, 11:30 மணி முதல் மதியம், 2:00 மணி வரை நடக்கிறது.ஓட்டுனர் பணிக்கு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 24 முதல், 35 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆண், பெண் என இருபாலரும் பங்கேற்கலாம். 162.5 செ.மீ.,க்கு குறையாமல் இருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் எடுத்து, குறைந்தது, 3 ஆண்டுகள் மற்றும் பேட்ஜ் வாகன ஓட்டுனர் உரிமம் பெற்று, ஓராண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும். தகுதியான விண்ணப்பதாரர்கள், கல்வி, ஓட்டுனர் உரிமம், அனுபவ அசல் சான்றுடன் பங்கேற்கலாம். மாத ஊதியம், 15,820 ரூபாய். எழுத்து, தொழில் நுட்ப தேர்வு, மனித வளத்துறை நேர்காணல், கண் பார்வை, மருத்துவம் சார்ந்த தேர்வு, சாலை விதிகளுக்கான தேர்வு நடக்கும். தேர்வு செய்யப்பட்டோருக்கு, 10 நாட்கள் முழுமையான வகுப்பறை பயிற்சி வழங்கி, பணி வழங்கப்படும்.மருத்துவ உதவியாளர் பணிக்கு, பி.எஸ்.சி., நர்சிங், ஜி.என்.எம்., - ஏ.என்.எம்., - டி.எம்.எல்.டி., அல்லது லைப் சயின்ஸ், பி.எஸ்.சி., விலங்கியல், தாவரவியல், பயோ கெமிஸ்டரி, மைக்ரோ பயாலஜி, பயோடெக்னாலஜி என ஏதாவது படித்திருக்க வேண்டும். வயது, 19 முதல், 30க்குள் இருக்க வேண்டும். மாதம், 16,020 ரூபாய் ஊதியம். எழுத்து தேர்வு, மருத்துவ நேர்முக உடற்கூறியல், முதலுதவி, அடிப்படை செவிலியர் பணி, மனித வளத்துறை நேர்முக தேர்வு நடக்கும்.கூடுதல் விபரம் பெற, 044 28888060, 73977 24813, 73388 94971 என்ற எண்களில் அறியலாம்.