பேரூராட்சி செயல் அலுவலருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு லஞ்ச வழக்கில் ஈரோடு கோர்ட் தீர்ப்பு
ஈரோடு:கட்டட அனுமதி சான்று வழங்க, 5,000 ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில், பேரூராட்சி செயல் அலுவலர் உட்பட இருவருக்கு, இரண்டாண்டு சிறை தண்டனை விதித்து, ஈரோடு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையை சேர்ந்தவர் செல்வராஜ். கட்டட அனுமதி சான்று பெற அம்மாபேட்டை பேரூராட்சி அலுவலகத்தில், 2012ல் விண்ணப்பித்தார். அப்போதைய செயல் அலுவலர் கார்த்திகேயன், டேங்க் ஆப்பரேட்டர் கோபால் மூலம், 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். பணம் கொடுக்க விரும்பாத செல்வராஜ், ஈரோடு ஊழல் தடுப்பு பிரிவு போலீஸில் புகாரளித்தார். அவர்கள் திட்டப்படி, 2012 டிச.,14ல் பேரூராட்சி அலுவலகம் சென்று, செயல் அலுவலர் மற்றும் கோபாலிடம் பணம் வழங்கினார். பணத்தை பெற்றுக்கொண்ட இருவரையும் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஈரோடு முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதி ராமசந்திரன் நேற்று தீர்ப்பளித்தார். அரசு பணியை செய்ய லஞ்சம் கேட்டதற்கும், லஞ்சம் வாங்கியதற்கும், இருவருக்கும் தலா இரண்டாண்டு சிறை தண்டனை விதித்தும், இருவருக்கும் தலா, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார்.