குறைதீர் மனுக்கள் மீது நடவடிக்கை இல்லை பட்டியலிட்டு விவசாயிகள் ஆதங்கம்
ஈரோடு,ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், டி.ஆர்.ஓ., சாந்தகுமார் தலைமையில் வேளாண் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு: கொடிவேரி அணை, பவானி நதி பாசன விவசாயிகள் சங்க தலைவர் சுபிதளபதி: மேவாணியில் முறையற்ற அனுமதியுடன் செயல்படும், ஆலை மின் இணைப்பை துண்டிக்க நீதிமன்ற அனுமதி பெற்றுத்தந்தும் நடவடிக்கை இல்லை. குறைதீர் கூட்டங்களில் வழங்கப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை.மலைவாழ் மக்கள் நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் குணசேகரன்: மலைப்பகுதியில், 17 பேருக்கு தாட்கோ மூலம் ஆடு வாங்க மானிய கடனை பரிந்துரைத்து, தாமரைக்கரை கனரா வங்கி, 2 பேருக்கு மட்டுமே கடன் வழங்கியது. மலைப்பகுதியில், தடை செய்யப்பட்ட பூச்சி கொல்லி மருந்து விற்பனையை தடுக்க மனு வழங்கினேன். தடை செய்யப்பட்ட மருந்துகள் உள்ளது என, வேளாண் துறையே எனக்கு பதில் கடிதம் வழங்கியும், நடவடிக்கை இல்லை.ஓடத்துறை பாசன விவசாயிகள் சங்க தலைவர் வெங்கடாசலம்: தென்னையை கடுமையாக பாதிக்கும் வெள்ளை ஈ தாக்குதலை தடுக்க, ஒட்டுண்ணியை தோட்டக்கலை துறை வழங்கவில்லை. மின்வாரிய அதிகாரி: மேவாணி ஆலையை ஆய்வு செய்து அறிக்கை கொடுத்துள்ளோம். மின் இணைப்பை துண்டிக்க இயலாது.டி.ஆர்.ஓ.,: அது வேறு தனிப்பிரச்னை. நாம் தனியாக பேசலாம் என தவிர்த்தார். வேளாண் கூட்ட மனுக்கள் மீதான நடவடிக்கையை ஆய்வு செய்கிறோம். நடவடிக்கைக்கான பதில் அல்லது தள்ளுபடிக்கான காரணத்தை தெரிவிக்க கூறுகிறோம்.தோட்டக்கலை துணை இயக்குனர் குருசரஸ்வதி: வெள்ளை ஈக்கான ஒட்டுண்ணி வேறு மாவட்டத்தில் உற்பத்தி செய்து, 15 நாளில் நமக்கு கிடைக்கும், 4,000 ஏக்கர் தென்னைக்கு இலவசமாக வழங்கப்படும். மாநில அளவில் இப்பிரச்னை அதிகம் உள்ளதால், பிற மாவட்டங்களுக்கும் வழங்குவதால், இங்கு 4,000 ஏக்கருக்கு மட்டுமே வழங்கப்படும். நாமே உற்பத்தி செய்ய அரசு நிதி வழங்கினால்தான், இங்கு உற்பத்தி செய்ய இயலும்.வேளாண் இணை இயக்குனர் தமிழ்செல்வி: மலைப்பகுதியில் எந்த கடையில் பூச்சி மருந்து விற்கப்படுகிறது என கூறுங்கள். நடவடிக்கை எடுக்கிறோம். உங்களுக்கு துறை மூலம் பதில் வழங்கியது பற்றி தெரியவில்லை.இவ்வாறு விவாதம் நடந்தது.