உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மோசடி வங்கி மேலாளரால் அடகு வைத்த நகைகளை மீட்க போராடும் விவசாயிகள்

மோசடி வங்கி மேலாளரால் அடகு வைத்த நகைகளை மீட்க போராடும் விவசாயிகள்

டி.என்.பாளையம், டி.என்.பாளையம் அருகே டி.ஜி.புதுாரில், தமிழ்நாடு கிராம வங்கி கிளை செயல்படுகிறது. வங்கியில் கடந்த, 2021ல் அப்பகுதியை சேர்ந்த, 20க்கும் மேற்பட்ட விவசாயிகள், வாடிக்கையாளர்கள், 345 சவரன் நகையை அடமானம் வைத்திருந்தனர். கடந்த, 2022ல் பணத்தை செலுத்தி விட்டு நகையை கேட்டனர். ஆனால் அப்போதைய மேலாளர் மணிகண்டன், 345 சவரன் நகையை பல்வேறு வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள், அடகு கடைகளில் அடகு வைத்து, ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்கள் புகாரின்படி ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மணிகண்டனை கைது செய்தனர். அவரிடம் இருந்த நகை அடகு ரசீதுகளை வைத்து, 258 சவரன் நகைகளை மீட்டு நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.நகைகளுக்கு பணம் கொடுத்திருப்பதால், தங்களிடம் ஒப்படைக்க, அடகு வைத்த வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன. இதனால் மீட்கப்பட்ட நகைகளை வாடிக்கையாளர்களுக்கு திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. நகையை அடகு வைத்தவர்கள், இது தொடர்பாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வங்கி முன் நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம வங்கி மண்டல மேலாளர் கலையரசன், விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். நீதிமன்றத்தில் வழக்கு நடப்பதால், ஆறு மாத அவகாசம் கேட்கவே, விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி