ஆடு திருடர்களை பிடிக்காவிடில் ஸ்டேஷனில் தஞ்சம் பு.புளியம்பட்டி போலீசாருக்கு விவசாயிகள் கெடு
பு.ளியம்பட்டி :புன்செய்புளியம்பட்டி பகுதியில் காராப்பாடி, புங்கம்பள்ளி, சுங்கக்காரன் பாளையம், செல்லம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த மூன்று மாதங்களாக இரவில் ஆடு திருடப்படுவது தொடர் கதையாக உள்ளது. இந்த வகையில் வீடு மற்றும் தோட்டங்களில், 50க்கும் மேற்பட்ட ஆடுகள் திருடப்பட்டுள்ளன. சில நாட்களுக்கு முன் புங்கம்பள்ளியில், இரவில் ஆடு திருட டூவீலரை வந்த கும்பலை மக்கள் விரட்டியுள்ளனர். இந்நிலையில் ஆடு திருடர்களை பிடிக்க, புன்செய்புளியம்பட்டி போலீசாருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கூறியதாவது: கடந்த, 6 மாதங்களில், 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆடுகள் திருடப்பட்டுள்ளன. புன்செய் புளியம்பட்டி போலீசில் புகார் தெரிவித்தால் 'சிசிடிவி' கேமரா பொருத்துங்கள் என்கின்றனர். போலீசார் நடவடிக்கை இல்லாததால் இரவில் கண் விழித்து காவல் இருக்கிறோம். ஆடுகளை திருடும் கும்பலை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுக்காவிட்டால், ஆடுகளுடன் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் அடைய முடிவு செய்துள்ளோம். இவ்வாறு கூறினர்.