உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அனுமதி பெறாமல் 489 ஏக்கர் குளத்தில் படகு போட்டி காவிலிபாளையத்தில் மீனவர்கள் அதிர்ச்சி

அனுமதி பெறாமல் 489 ஏக்கர் குளத்தில் படகு போட்டி காவிலிபாளையத்தில் மீனவர்கள் அதிர்ச்சி

புன்செய்புளியம்பட்டி:புன்செய் புளியம்பட்டி அருகே காவிலிபாளையத்தில் நீர்வள ஆதாரத்துறைக்கு சொந்தமான, 489 ஏக்கர் பரப்பளவில் குளம் உள்ளது. அத்திக்கடவு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள இந்த குளத்தில் தற்போது நீர் நிரம்பியுள்ளது. இந்நிலையில் தனியார் அமைப்பு சார்பில், குளத்தில் படகுப்போட்டி நேற்று நடந்தது. ஐந்து பெண்கள் உட்பட, 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நீர்வளத்துறை மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட அரசு துறைகளிடம் அனுமதி பெறாமல் போட்டி நடத்தப்பட்டுள்ளது. இதனால் குளத்தில் விடப்பட்டுள்ள லட்சக்கணக்கான மீன்கள் பாதிக்கும் என்று மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.இதுகுறித்து மீனவர்கள் கூறியதாவது: இதுவரை இந்த குளத்தில் படகுப்போட்டி எதுவும் நடத்தப்பட்டதில்லை. நீர் நிரம்பியுள்ள சமயத்தில் சுழல் அபாயங்கள் உள்ளன. படகு போட்டிக்கு ஆரம்பத்திலேயே எதிர்ப்பு தெரிவித்தோம். அதை மீறி தனியார் அமைப்பினர் நடத்தியுள்ளனர். தி.மு.க., மாவட்ட செயலாளர் நல்லசிவம் போட்டியை துவக்கி வைத்துள்ளார். குளத்தில் லட்சக்கணக்கான மீன்கள் இருப்பு உள்ள நிலையில் மீன் பிடிக்கும் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.இதுகுறித்து நீர்வள ஆதாரத்துறை உதவி பொறியாளர் பாலசுப்பிரமணியம் கூறுகையில், 'படகுப்போட்டி நடத்த மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்றிருப்பார்கள் என நினைக்கிறேன்' என மழுப்பலாக பதில் கூறினர்.நீர் நிலைகளில் இது போன்ற போட்டிகள் நடத்த, காவல், தீயணைப்பு, மின்வாரியம், பொதுப்பணி உள்ளிட்ட துறைகளில் முறையாக அனுமதி வாங்குவது மட்டுமின்றி, கலெக்டர் அலுவலகத்தில் தடையின்மை சான்று வாங்க வேண்டும் என்பது விதிமுறை. இதையெல்லாம் உதாசீனப்படுத்தி போட்டி நடந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ