சிறுத்தையை உறுதி செய்த டிரோன் கேமரா கிராம மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை
புன்செய்புளியம்பட்டி, விளாமுண்டி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு சிறுத்தை, புன்செய் புளியம்பட்டி அருகே மாராயிபாளையம் கிராமத்தில் பட்டப்பகலில் புகுந்தது. ஆடுகளை அடித்து கொன்றதோடு, அங்குள்ள மலைக் குன்றில் பதுங்கியது. மக்கள், விவசாயிகள் புகாரை தொடர்ந்து வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வில் ஈடுபட்டதில், சிறுத்தை என்பதை நேற்று முன்தினம் உறுதி செய்தனர். இந்நிலையில் அன்றிரவே அதி நவீன டிரோன் கேமரா மூலம், குன்று பகுதியில் தேடுதல் பணி நடந்தது. இதில் சிறுத்தை நடமாட்டம் அங்கு பதுங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் இரவு நேரங்களில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.இதுகுறித்து ரேஞ்சர் கணேஷ் பாண்டியன் கூறியதாவது: வனத்துறை ஊழியர்கள் துப்பாக்கியுடன் முகாமிட்டு சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். உரிய அனுமதி பெற்று, சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இரவு நேரத்தில் பொதுமக்கள் வெளியில் நடமாட வேண்டாம். சிறுத்தை உறுமல் சத்தம், கால்நடை அலறல் சத்தம் கேட்டால், உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.