ரூபாய் நோட்டு அலங்காரத்தில் விநாயகர்; பக்தர்கள் பரவசம்
ஈரோடு: ஈரோட்டில், ரூபாய் நோட்டு அலங்காரத்தில் உள்ள விநாயகரை பொதுமக்கள் தரிசித்து செல்கின்றனர். ஈரோடு, வீரப்பன்சத்திரம் கலைவாணர் வீதியில், இந்து முன்னணி உதவியுடன் ஜூனியர் பிளாக் ரோஸ் நண்பர்கள் சார்பில், 12ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா நடந்து வருகிறது. கடந்த, 6ம் தேதி காலை கலைவாணர் வீதியில், ஐந்து அடி உயர சித்தி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. நேற்று காலை சிலைக்கு, ஒரு லட்சத்து, 90 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தில் அலங்கரிக்கப்பட்ட சித்தி விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். விநாயகர் சிலையுடன் பலர் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.விழா ஏற்பாடு குழு தலைவர் துரைசாமி கூறியதாவது: உறுப்பினர்கள் உதவியுடன், 200, 100, 50, 20,10 ரூபாய் புதிய நோட்டுகளை பொதுமக்கள், பக்தர்களிடம் இருந்து கடந்த ஜூலை முதல் பெற்று வந்தோம். மேலும், ஒரு சில இடங்களில் இருந்தும் புதிய ரூபாய் நோட்டுகளை வாங்கினோம். ஒரு லட்சத்து, 90 ஆயிரம் ரூபாயில் அலங்காரம் செய்துள்ளோம். இரண்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டு கொடுத்தவர்களுக்கு, அலங்காரம் கலைக்கப்பட்ட பின் மீண்டும் அதே நோட்டுகள் கொடுக்கப்படும். இவ்வாறு கூறினார்.