உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாநகரில் 2 மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழை

மாநகரில் 2 மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழை

ஈரோடு, ஈரோடு மாநகரில் நேற்று வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் பகலில் மக்கள் வீடுகளில் முடங்கினர். இந்நிலையில் மாலை, 6:30 மணிக்கு பலத்த காற்றுடன் சாரலாக மழை தொடங்கியது. சிறிது நேரத்தில் காற்றின் வேகம் குறைந்து, மழையின் வேகம் அதிகரித்து வலுத்தது. ஏறக்குறைய இரண்டு மணி நேரம் வேகம் குறைவது, அதிகரிப்பது என மாறிமாறி கனமழையாக கொட்டி தீர்த்தது.இதனால் மாநகரில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம்போல் தேங்கியது. வழக்கம்போல் வீரப்பன் சத்திரம் பஸ் நிறுத்த பகுதி வெ ள்ளத்தில் மூழ்கியது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதி அடைந்தனர். போக்குவரத்தும் பாதித்தது.சாந்தாக்காடு முதல் வீரப்பன்சத்திரம் முனியப்பன் கோயில் வரை, வாகனங்கள் அணிவகுத்து ஊர்ந்து சென்றன. இதேபோல் மணிக்கூண்டு, ஆர்.கே.வி.ரோடு, ரயில் நிலைய ரோடு, மீனாட்சி சுந்தரானார் சாலை, கொங்கலம்மன் கோவில் வீதி உள்ளிட்ட சாலைகளில் மழைநீர் தேங்கியது.இரவு, 8:30 மணிக்கு மழை நின்றதும் சாலைகளில் தேங்கிய மழைநீர் வடிந்தது. கனமழையால் மக்களின் இயல்பு வாழ்கை பாதித்தது. அதேசமயம் கடும் வெயிலால் தவித்த மக்களுக்கு, கனமழை வரப்பிரசாதமாக அமைந்தது.காலையில் வெப்பத்தை காட்டி அஞ்ச வைத்த இயற்கை, இரவில் மழையை கொடுத்து கொஞ்சி சென்றது. இயற்கை என்றால் சும்மாவா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ