பவானிசாகரில் பேரூராட்சி காலி இடம் ரகசிய ஒதுக்கீடு போராட திரண்டு வந்த மக்களால் பரபரப்பு
பவானிசாகரில் பேரூராட்சி காலி இடம் ரகசிய ஒதுக்கீடுபோராட திரண்டு வந்த மக்களால் பரபரப்புபவானிசாகர், அக். 15-பவானிசாகர் பேரூராட்சிக்கு சொந்தமாக மார்க்கெட் சதுக்கம், பகுடுதுறை ரோடு, டேம் சாலை, பண்ணாரி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் நுாற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இவை அனைத்தும் நில வாடகைகளாக வசூல் செய்யப்படுகின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு பல லட்ச ரூபாய் வருவாய் கிடைத்து வருகிறது. இந்நிலையில் பஸ் ஸ்டாண்ட் எதிரேயுள்ள கார் ஸ்டாண்ட் பகுதியில் பேரூராட்சிக்கு சொந்தமான காலி இடத்தில், அ.தி.மு.க., சார்பில் விளம்பர பலகை, பா.ஜ., சார்பில் பந்தல் மற்றும் மக்கள் சார்பாக நான்கு கடைகள் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும், மேற்படி கடைகளை அகற்றக்கோரி, பேரூராட்சி செயல் அலுவலர், பவானிசாகர் போலீசில் புகார் மனு அளித்துள்ளார். இதற்கிடையே அந்த இடத்துக்கு அருகில், பேரூராட்சியால் அனுமதிக்கப்பட்ட ரகு கார்மெண்ட்ஸ் மற்றும் ஆஸ்கார் சில்லிஸ் என இரு கடைகள் ஆரம்பிக்க தகர சீட் போடப்பட்டுள்ளது. இந்த கடைகளை ஆரம்பிக்க அனுமதிக்கப்பட்ட விபரங்களை தங்களுக்கு தெரியப்படுத்தவில்லை எனக்கூறி, பொதுமக்கள் அப்பகுதியில் கடை அமைக்க பந்தல் பொருட்களுடன், நேற்றிரவு, ௭:௦௦ மணியளவில் வந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பவானிசாகர் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 'பேரூராட்சிக்கு சொந்தமான காலி இடத்தை பொது ஏலம் விடாமல், இரண்டு பேருக்கு ரகசியமாக ஒதுக்கீடு செய்துள்ளனர். இதனால் நாங்களும் கடை அமைக்க பந்தல் பொருட்களுடன் வந்துள்ளோம்' என்று கூறி, மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.'இது தொடர்பாக பேரூராட்சி அதிகாரிகள் முன்னிலையில் நாளை (இன்று) பேச்சுவார்த்தை நடத்திக் கொள்ளலாம்' என போலீசார் கூறவே, மக்கள் கலைந்து சென்றனர்.