கொல்லம்பாளையம் ஓடை துார்வாரும் பணி மும்முரம்
ஈரோடு, ஈரோடு மாநகராட்சி, 59வது வார்டுக்கு உட்பட்ட கொல்லம்பாளையம், கட்டபொம்மன் வீதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிக்கு அருகில் செல்லும் ஓடையில் துார்வாரும் பணிகள் நடக்காததால், கழிவுநீருடன் கலந்து மழைநீர், தெருவில் வருவது வாடிக்கையானது. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வந்தனர்.இந்நிலையில் கடந்த, 19, 21ம் தேதிகளில் மழைநீர் வீதியில் புகுந்து, குடியிருப்பு வீடுகளில் தஞ்சம் அடைந்ததால் பொதுமக்கள் சிரமப்பட்டனர். இது குறித்து நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதனையடுத்து, 22ம் தேதி நேரில் களமிறங்கிய கலெக்டர் கந்தசாமி, பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து, ஓடையை துார்வாரும் பணிகளை துவக்கி வைத்தார். இந்த பணிகள் மும்மரமாக நடந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் ஹிட்டாச்சி வாகனத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக துார்வாரும் பணி தடைபட்டது. இந்நிலையில், நேற்று மதியம் 1:00 மணியளவில் வாகனம் பழுது சரி செய்யப்பட்டதையடுத்து, துார்வாரும் பணிகள் துவங்கின.