நிலம் மோசடி; எஸ்.பி., அலுவலகத்தில் மனு
ஈரோடு: சென்னிமலை அட்டவணை பிடாரியூர், ஓட்டப்பாறை காந்தி நகரை சேர்ந்த ரவி தலைமையிலான மக்கள், ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:சென்னிமலை யூனியன், அட்டவணை பிடாரியூர் ஓட்டபாறை ஊராட்சி காந்தி நகரில், 225க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. கடந்த, 1979 முதல் இந்த இடத்தை வீட்டுமனைகளாக பிரித்து சென்னிமலை கிளை தி.மு.க., முன்னாள் பொருளாளர் கைலாசநாதனின் தந்தை சென்னிமலை வழங்கினார்.நாங்கள் இடத்தை கிரயம் செய்துள்ளோம். இதை தனித்தனி மனைகளாக்கி வீடு கட்டி வீட்டு வரி ரசீது, மின் இணைப்பு பெற்றுள்ளோம். பஞ்.,சார்பில் தார்ச்சாலை போடப்பட்டுள்ளது. இந்த இடத்தை பட்டா மாறுதல் செய்ய, வீடு விற்க, வீடு கட்ட முடியவில்லை. கைலாசநாதன் தன் தந்தை விற்ற மொத்த இடத்தின் மூல பத்திரத்தை வைத்து, அவரது மகன் கார்த்திகேயன், மனைவி செல்வி பெயரில், 2015, 2017ல் தான செட்டில்மெண்ட் பத்திரம் மூலம் பதிவு செய்து பத்திரங்களை அடமானம் வைத்து, கோவையில் உள்ள வங்கிகளில் கோடிக்கணக்கான ரூபாய் கடன் பெற்றுள்ளார்.இதற்கு வங்கி அதிகாரிகள், வருவாய் துறையினர், பதிவாளர் அலுவலகத்தினர் துணை போயுள்ளனர். இந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. நில மோசடியில் ஈடுபட்ட கைலாசநாதன், செல்வி, கார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.இதுபற்றி கைலாசநாதன் கூறியதாவது: கடந்த ஓராண்டாகவே இப்பிரச்னை தொடர்கிறது. நான் வங்கியில் வாங்கிய கடன் வாங்கிய இடத்துக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. அரசியல் கட்சியை சேர்ந்த சிலர் ஆதாயம் பார்க்க இப்பிரச்னையை கிளப்புகின்றனர். வீட்டு மனை பட்டா இடத்துக்கு இதில் தொடர்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.