உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இணக்கமான தீர்வு காணும் சமரச மையம்

இணக்கமான தீர்வு காணும் சமரச மையம்

திருப்பூர், தாலுகா அளவிலான கோர்ட் முதல் சுப்ரீம் கோர்ட் வரை தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கை மலைப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. ஏறத்தாழ 4.70 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.ஒவ்வொரு நீதிபதிக்கும் சராசரியாக 5 ஆயிரம் வழக்குகள் என்ற ரீதியில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக வக்கீல்கள் தெரிவிக்கின்றனர். நாளுக்கு நாள் புதிதாக வரும் வழக்குகள் நீதித்துறைக்கு சவால் விடுவதாக உள்ளது. நீதிதுறை சார்பில் மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்), சமரச தீர்ப்பாயம், வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் போன்ற அமைப்புகள் செயல்படுத்தப்படுகிறது. இவற்றின் மூலம் கோர்ட்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் எண்ணிக்கை கணிசமாக குறைகிறது.திருப்பூர் மாவட்டத்தில் மாவட்ட நீதிபதி செல்லதுரை தலைவராகவும், சார்பு நீதிபதி சந்தோஷ் ஒருங்கிணைப்பாளராகவும் கொண்டு, மாவட்ட சமரச மற்றும் இணக்கத்தீர்வு மையம் இயங்கி வருகிறது. மாவட்ட கோர்ட் வளாகத்தில் இம்மையம் உள்ளது. அவிநாசி, தாராபுரம், காங்கயம், மடத்துக்குளம், பல்லடம், உடுமலை மற்றும் ஊத்துக்குளி பகுதிகளில் வட்ட சமரச மையங்கள் உள்ளன. சமரசச் செயல்முறை என்பது தன்னிச்சையான தரப்பினரை மையமாகக் கொண்ட பேச்சுவார்த்தை செயல்முறை. சமரசர் என்பவர் நடுநிலையான மூன்றாம் நபர். சிறந்த தகவல் பரிமாற்றம் மற்றும் பேச்சு வார்த்தை முறைகளைப் பயன்படுத்தி, தரப்பினர்கள் தங்கள் பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்ள உதவுகிறார். தீர்வு காண வேண்டுமா என்பதையும், தீர்வின் தரப்பினர்கள் அதை ஒப்புக்கொண்டு தரப்பினர்கள் மற்றும் சமரசர் கையொப்பம் இட்டவுடன், அவை கோர்ட் உத்தரவைப் போல கட்டுப்படுத்தும் தன்மை மற்றும் செயல்படுத்தத்தக்க வகையிலும் இருக்கும். சமரச செயல்முறையில் தீர்வு கிடைக்காவிட்டால், மீண்டும் கோர்ட் அல்லது இசைவுத் தீர்வு நடுவரையோ எப்போது வேண்டுமானாலும் நாடலாம்.வழக்கு விசாரணை நிலு வையில் இருந்தால், எந்த ஒரு நிலையிலும், அந்த கோர்ட் அல்லது இசைவுத் தீர்வம் மற்றும் தீர்ப்பாயங்கள் மூலமும் வழக்கை சமரச மையத்திற்கு அனுப்பக் கோரலாம். இது மட்டுமல்லாது வழக்குதாரர் விரும்பினால், எந்தவொரு சமரச மையத்துக்கும் வழக்கை அனுப்பி வைக்கக் கோரலாம். வழக்குமுறை முரண்களை முடிவுக்கு கொண்டு வர நினைக்கும் எந்த ஒரு தனி நபரோ, நிறுவனமோ, சங்கமோ அல்லது ஒன்றிணைந்த குழுவோ சமரச மையத்தை நாடலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ