| ADDED : நவ 22, 2025 02:17 AM
காங்கேயம், மெட்ரோ ரயில் திட்டங்களை தாமதப்படுத்துவது, சுற்றுசூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என, தி.மு.க., சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கோவை, மதுரைக்கு முன்மொழியப்பட்ட மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு எதிராக எழுப்பப்பட்ட நிர்வாக தாமதங்கள் மற்றும் ஆட்சேபனைகளை மறுபரிசீலனை செய்ய, மத்திய அரசை வலியுறுத்துகிறோம். ஏனெனில் இந்த முடிவுகள் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, பொது சுகாதாரம், தேசிய எரிசக்தி நுகர்வு மற்றும் உலகளாவிய காலநிலை ஒப்பந்தங்களின் கீழ் இந்தியாவின் உறுதிமொழிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மெட்ரோ ரயில் உள் கட்டமைப்பு திட்டம் மட்டுமல்ல; துாய்மையான போக்குவரத்து இயக்கம். நகர்ப்புற நெரிசலை நீக்க, குறைந்த கார்பன் பயன்பாடு மூலம் பொருளாதார வளர்ச்சிக்கான அடித்தளமாகவும் உள்ளது. மெட்ரோ ரயில் அமைப்புகள் ஒரு மணி நேரத்துக்கு ஆயிரக்கணக்கான பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும். இதனால் கோவை அல்லது மதுரை போன்ற ஒரு நகரம் ஒரு நாளைக்கு, 30,000-50,000 பயணிகளை தனி வாகன பயன்பாட்டிலிருந்து விலக்கி பொது போக்குவரத்துக்கு வரவைக்கும். இந்த திட்டங்களை நிறுத்துவதற்கு எந்த அறிவியல் அல்லது சுற்றுச்சூழல் நியாயமும் இல்லை. எனவே தாமதமின்றி கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை அனுமதிக்க மத்திய அரசை வலியுறுத்துகிறோம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.