ஈரோட்டில் நாளை விநாயகர் சிலை ஊர்வலம் போக்குவரத்தில் சிறிய அளவில் மாற்றம்
ஈரோடு :சதுர்த்தியை ஒட்டி ஈரோடு மாநகரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள், நாளை மாலை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கரைக்கப்படுவதால், மாகநரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஹிந்து முன்னணி, ஹிந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில், 1,494 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. ஈரோடு மாநகரில் மட்டும், 159 சிலைகள் வைத்து பூஜை மற்றும் வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள், நாளை மாலை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, காவிரி ஆற்றில் கரைக்கப்பட உள்ளது.ஈரோடு சம்பத்நகர் நால்ரோட்டில் இருந்து மாலை, 5:00 மணிக்கு ஊர்வலம் தொடங்குகிறது. பெரியவலசு நால்ரோடு, முனிசிபல் காலனி, மேட்டூர் சாலை, மீனாட்சி சுந்தரனார் சாலை, காமராஜர் சாலை, ஈஸ்வரன் கோவில் வீதி, ஆர்.கே.வி.சாலை, காவிரி சாலை, கருங்கல்பாளையம், வழியாக காவிரி ஆற்றின் பழைய பாலம் பகுதிக்கு சென்றடைகிறது. அங்கு ஆற்றில் சிலைகள் நீரில் விடப்படுகிறது. ஊர்வலம் செல்லும் பாதைகளில், அசம்பாவித சம்பவங்களை தடுக்க எஸ்.பி., சுஜாதா உத்தரவின்படி, சட்டம்-ஒழுங்கு போலீசார், ஆயுதப்படை போலீசார், போக்குவரத்து போலீசார், ஊர் காவல் படையினர் என, 600 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதனால் ஈரோட்டில், ௩௦ம் தேதி மாலை, ௪:00 மணி முதல் இரவு, 10:00 மணி வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கனரக வாகனங்கள் அனைத்தும் புறநகர் பகுதிகளில் திருப்பி விடப்படும். இலகு ரக வாகனங்கள் மட்டும்அனுமதிக்கப்படும். ஊர்வல பாதையில் வாகன இயக்கம் நிறுத்தப்படும். ஊர்வலம் சாலையை கடந்த பின் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.