தோனிமடுவு பள்ளத்தில் எம்.பி., - எம்.எல்.ஏ., ஆய்வு
பவானி: பர்கூர் கிழக்குமலை பகுதியிலிருந்து பெருக்கெடுக்கும் காட்டாற்று வெள்ளம், பாலாற்றில் கலந்து மேட்டூர் அணையில் கலக்கிறது. சேலம் மாவட்டம் கொளத்துார் வனப்பகுதியில், தோனிமடுவு பள்ளத்தில் தடுப்பணை கட்டி, அம்மாபேட்டை, அந்தியூர், பவானியில் உள்ள ஏரிகளுக்கு குழாய் மூலம் தண்ணீரை நிரப்ப, விவசாயிகள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் எம்.பி., சுப்பராயன், அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம் ஆகியோர், தோனிமடுவு பள்ளத்தில் நேற்று, மூன்று மணி நேரம் ஆய்வு நடத்தினர். ''இத்திட்டம் குறித்து வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சி திட்ட அமைச்சர்கள் வாயிலாக, நீர்வளத்துறை அமைச்சர், முதல்வருக்கு தெரிவித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என்று, எம்.பி., சுப்பராயன் தெரிவித்தார்.