கொலை வழக்கில் -கைதாகி ஜாமினில் வந்தவர் 9 ஆண்டுகளுக்கு பின் கைது
சென்னிமலை, சென்னிமலையில் 2014ம் ஆண்டு நடந்த கொலையில், கைதாகி சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்து கடந்த, 9 ஆண்டுகளாக தலைமறைவான கைதியை, போலீசார் நேற்று கைது செய்தனர்.ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் விக்ரம் (எ) ஜெகதீஷ் பெர்சா, 24. இவரது அக்கா பசந்தி பெரேசா (எ) கல்பனா, 26. அக்கா, தம்பி இருவரும் ஈங்கூர் பகுதியில், 15 ஆண்டுகளுக்கு முன்பு வசித்து வந்தனர். அப்போது பசந்தி பெரேசாவை, ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தரவ்ன்சா என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். இருவரும் கோவை மாவட்டத்தில் வசித்து வந்தனர்.இந்நிலையில் பசந்தி பெரேசாவிற்கு, அப்பகுதியில் உள்ள ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவரது தம்பி விக்ரம், அக்காவை ஈங்கூர் அழைத்து வந்து, அவருடன் வேலை செய்து வந்த நண்பர்கள் பலராம் சுனா, 23, நிரஞ்சன் கட்டியா, 36, ஆகிய மூவரும் சேர்ந்து, பசந்தி பெரேசாவின் தலையில் கல்லை போட்டு, 2014ம் ஆண்டு கொலை செய்தனர். மூவரையும் சென்னிமலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.பின்னர் மூவரும், 2016ம் ஆண்டு ஜாமினில் வெளியே வந்தனர். அதன் பின்னர் மூவரும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகினர். இந்நிலையில் நிரஞ்சன் காட்டியா திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருவதாக தகவல் கிடைத்தது. ஈரோடு எஸ்.பி., சுஜாதா, பெருந்துறை டி.எஸ்.பி., வசந்தராஜ் ஆகியோர் உத்தரவின்படி, சென்னிமலை இன்ஸ்பெக்டர் சிவக்குமார், எஸ்.ஐ., சரவணன் மற்றும் போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்து, ஈரோட்டில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி முன் ஆஜர் படுத்தினர். அவரை விசாரித்த நீதிபதி, கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.