கோபியில் புதிய பிக்கில் பால் விளையாட்டு அரங்கம் திறப்பு
ஈரோடு, கோபி, ஏரிஸ் நகர் அமலா பள்ளி அருகில் உள்ள, டயுஆர்எப் 36 மைதானத்தில், பிக்கில் பால் விளையாட்டு அரங்கம் திறப்பு விழா நடைபெற்றது.விளையாட்டரங்கத்தை, ஸ்ரீ சாய் சிந்து செவிலியர் கல்லுாரியின் துணைத் தலைவர், சாய் சிந்து சினிமாஸ் மல்டிபிளக்ஸ் அந்தியூர் நிர்வாக இயக்குனருமான டாக்டர் கிஷோர் ரவிச்சந்திரன் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். ஈரோடு மாவட்ட தி.மு.க., திட்டக்குழு உறுப்பினரும், கோபி நகர இளைஞரணி செயலாளருமான விஜய் கருப்புசாமி திறந்து வைத்தார். டியுஆர்எப் 36 நிறுவனர்கள் முத்து ரூபக் மற்றும் முகிலன் ஆகியோர் கூறுகையில், ''மைதானத்தில் ஏற்கனவே கிரிக்கெட் மற்றும் கால்பந்து போட்டிகளுக்கு பயிற்சி போட்டி நடந்து வருகிறது. கோபிசெட்டிபாளையத்தில், புதிய முயற்சியாக பிக்கில் பால் மைதானம் திறக்கப்பட்டுள்ளது. இது அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு உகந்த விளையாட்டாகும். இந்தியாவில் தற்போது பிரபலமாகி வரும், இந்த விளையாட்டை ஒலிம்பிக்கில் இணைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. வரும் நாட்களில் பிக்கில் பால் விளையாட்டுக்கான பல்வேறு பயிற்சி முகாம்கள் மற்றும் உள்ளூர்வாசிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளன,'' என்றனர்.திறப்பு விழாவில் ஈரோடு த.வெ.க., மேற்கு மாவட்ட செயலாளர் பிரதீப் குமார் மற்றும் கோபி நகர செயலாளர் ஜம்பு கார்த்திக் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.