வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை வட்டார அளவில் குழு செயல்பட உத்தரவு
ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பேசியதாவது:வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் இயற்கை இன்னல்களான மழை, வெள்ளத்துக்கு வட்டார அளவில் குழு, தேடுதல் மீட்பு குழு, நிவாரண முகாம், மேலாண்மை குழு, சிறப்பு குழு அமைத்து, பொறுப்பு அலுவலர்களை நியமிக்க வேண்டும். நீர் நிலைகள், நீர் வழித்தடங்கள், வடிகால்கள், கால்வாய்களை துார்வாரி பராமரிக்க வேண்டும். அரசு, தனியார் மருத்துவமனைகள், அரசு, தனியார் பள்ளிகள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் தொலைபேசி எண்: 1077, 0424 2260211ல் பேரிடர் குறித்து தெரிவித்து, நடவடிக்கையை விரைவுபடுத்தலாம். கள ஆய்வு அலுவலர்கள், வெள்ளம் உள்ளிட்ட பாதிப்பு விபரத்தை கண்டறிந்து, தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு உடன் தெரிவித்து சீரமைக்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சிகளில் மழை நீர் தடையின்றி செல்ல வழி செய்ய வேண்டும். மாவட்டத்தில் உள்ள, 17 மழைமானி நிலையங்களை ஆர்.டி.ஓ.,க்கள் தணிக்கை செய்து, அறிக்கை அனுப்ப வேண்டும்.சாலை உள்ளிட்ட பாதைகள் பாதித்தால், மாற்றுப்பாதை ஏற்படுத்த வேண்டும். பாதிப்போரை தங்க வைக்க நிவாரண முகாம்களாக பள்ளி, சமுதாய கூடம், தனியார் திருமண மண்டபங்களை தயார் செய்து, அவற்றை தணிக்கை செய்து வைத்து கொள்ள வேண்டும். நெடுஞ்சாலை துறையினர், பாலம், கல்வெட்டுகளை துார்வாரி தண்ணீர் தடை ஏற்படாதபடி கண்காணிக்க வேண்டும். அதுபோல, பிற துறைகள் இணைந்து செயல்பட வேண்டும்.இவ்வாறு பேசினார்.எஸ்.பி., ஜவஹர், மாநகராட்சி ஆணையர் மணீஷ், டி.ஆர்.ஓ., சாந்தகுமார், கோபி சப்-கலெக்டர் சிவானந்தம் உட்பட பலர் பங்கேற்றனர்.