திண்டல் அருகே நெல் நடவு பணி மும்முரம்
ஈரோடு, ஈரோடு கீழ்பவானி வாய்க்காலில் விவசாயத்திற்காக, பாசன நீர் திறக்கப்பட்டுள்ளதால், பல்வேறு இடங்களில் பயிர்கள் நடவு செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.ஈரோடு திண்டல் ரிங்ரோடு அருகே, பழனிக்கவுண்டன் பாளையத்தில் இரண்டு ஏக்கர் விவசாய நிலத்தில், ஐ.ஆர் 20 ரக நெற்பயிர்கள் நடவு செய்யும் பணி துவங்கப்பட்டுள்ளது. அப்போது, பெண்கள் பணியின் போது களைப்பு தெரியாமல் இருப்பதற்காக, தமிழர்களின் பாரம்பரிய கிராமிய பாடல்களை பாடியபடி நடவு பணியில் ஈடுபட்டனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்,' இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் ஓடை பாசனத்தை நம்பி உள்ளது. கீழ்பவானி வாய்க்கால் கசிவு மற்றும் மழைநீரை ஆதாரமாக கொண்டது இந்த ஓடை. ஏற்கனவே நிலங்களை சமன் செய்யும் பணிகளை துவங்கிவிட்டோம். தற்போது ஓடையில் தண்ணீர் வரத் தொடங்கிவிட்டதால், நெல் பயிர்களை நடவு செய்ய ஆரம்பித்து விட்டோம். இரண்டு ஏக்கரில் ஐ.ஆர் 20 பயிரை நடவு செய்து வருகிறோம். 90 நாட்களில் அறுவடைக்கு தயாராகிவிடும்,' என்றனர்.