ஆர்.டி.ஓ., ஆபீசில் மக்கள் போராட்டம் ஆக்கிரமித்து வீடு கட்டும் பணி நிறுத்தம்
மேட்டூர்:சேலம் மாவட்டம் மேட்டூர் நகராட்சி, 29வது வார்டில் வீட்டு வசதி வாரிய நிலத்தில் ஜீவா நகர், முல்லை நகரில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அங்கு செல்ல, 80 அடி அகல சாலை அமைக்கப்பட்டது. அதன் இருபுறமும் சிலர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டுகின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், நேற்று காலை, மேட்டூர் ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தொடர்ந்து அலுவலகம் முன், சாலை மறியலில் ஈடுபட்டனர். அம்பேத்கர் மக்கள் மைய தலைவர் சசிகுமார் தலைமையில் நடந்த போராட்டத்தில், மாவட்ட துணை செயலர் தங்கராஜ் உள்பட, 20க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மேட்டூர் போலீசார் பேச்சு நடத்தினர். அப்போது, ஆக்கிரமித்து கட்டப்படும் வீடுகளின் கட்டுமானப் பணியை நிறுத்த வலியுறுத்தினர்.பின் போலீசார், அங்கு சென்று, உடனே கட்டுமானப்பணிகளை தற்காலிக நிறுத்தம் செய்தனர். தொடர்ந்து அம்பேத்கர் மக்கள் மையத்தினர், ஆர்.டி.ஓ., உதவியாளர் புரு ேஷாத்தமனிடம் மனு கொடுத்தனர். அதற்கு அவர், 'கட்டுமானப்பணி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனினும் பணியை நிறுத்துவது தொடர்பாக, உயர் அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்ல்லப்படும்' என கூற, போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றனர்.