இரிபுரத்தில் குடிநீர் கேட்டு மக்கள் மறியல்
சத்தியமங்கலம்;தாளவாடிமலையில் உள்ள தாளவாடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட இரிபுரம் மலை கிராமத்தில், 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு கடந்த சில மாதங்களாகவே குடிநீர் வினியோகம் முறையாக செய்யப்படவில்லை. இதனால் அருகில் உள்ள தோட்டங்களுக்கு சென்று குடிநீர் கொண்டு வர நேரிட்டது. தோட்டங்களிலும் தண்ணீர் குறைவாக போனதால் தட்டுப்பாடு ஏற்பட்டு அவதிக்கு ஆளாகினர். பஞ்., நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், இரிபுரம்-தாளவாடி சாலையில், 50க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.அதிகாரிகள், வருவாய் துறையினர் மற்றும் போலீசார் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பழுதடைந்த ஆழ்துளை கிணற்று மோட்டார் சரி செய்யப்பட்டு குடிநீர் வழங்கப்படும் என்று உறுதி கூறியதால், மறியல் போராட்டத்தை கைவிட்டு சென்றனர். இதனால், 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.