இலவச வேட்டி, சேலை முழு அளவு உற்பத்திக்கு உத்தரவிட விசைத்தறியாளர்கள் கோரிக்கை
ஈரோடு, தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சுரேஷ், பொருளாளர் பாலசுப்பிரமணியம் முன்னிலையில், ஈரோடு டி.ஆர்.ஓ., சாந்தகுமாரிடம், நேற்று வழங்கிய மனுவில் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின்போது வழங்குவதற்காக, 1.77 கோடி வேட்டி, 1.77 கோடி சேலை உற்பத்தி செய்ய அரசு இலக்கு நிர்ணயிக்கும். கடந்தாண்டு உற்பத்திக்கு அரசாணை வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டதால் உற்பத்தியும் தாதமாகி, வேட்டி, சேலை சேர்ந்து, 64 லட்சம் இருப்பானது. இந்தாண்டு உற்பத்தியில் அதை கழித்துவிட்டு இலக்கு நிர்ணயித்ததால், விசைத்தறியாளர்களுக்கு, 2 மாதத்துக்கு மேல் பணி இழப்பு ஏற்படுகிறது. அதை சேர்த்து முழு அளவிலான உற்பத்திக்கு உத்தரவிட வேண்டும். தற்போதைய உற்பத்திக்கும் பாவு, ஊடை நுால் கிடைக்காததால், விசைத்தறிகள் பணியின்றி நிற்கிறது. நிதி விடுவிக்காததால் தீபாவளி நேரத்தில் விசைத்தறியாளர்களுக்கு போனஸ், சம்பளம் வழங்க முடியாமல் உள்ளது. நெசவாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் திட்டமிட்டு, முழு உற்பத்திக்கும், போதிய நிதியை விடுவித்தும் அரசு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.